tamilnadu epaper

சிறப்பு அதிகாரம் இருக்கு... சுப்ரீம்கோர்ட் செய்தது சரி..! *தமிழக விவகாரத்தில் நீதிபதி குரியன்ஜோசப் விளாசல்

சிறப்பு அதிகாரம் இருக்கு...  சுப்ரீம்கோர்ட் செய்தது சரி..!  *தமிழக விவகாரத்தில் நீதிபதி குரியன்ஜோசப் விளாசல்


புதுடெல்லி, ஏப். 21–

தமிழக கவர்னரின் செயல்பாடுகள் சட்ட விரோதமானது என்று கூறி பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிய விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட் செய்தது சரியே. அதற்கான சிறப்பு அதிகாரம் இருக்கிறது என்று ஓய்வு நீதிபதி குரியன் ஜோசப் ஆணித்தரமாக கூறினார்.

 தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர்ரவி கிடப்பில் போட்டதால், தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக கவர்னரின் செயல்பாடுகள் சட்டவிரோதமானவை. மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பியது தவறு. அமைச்சரவை ஆலோசனை படியே கவர்னர் செயல்பட வேண்டும். கவர்னர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. கவர்னரின் முடிவு ரத்து செய்யப்படுகிறது. பத்து மசோதாக்களும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவே கருத முடியும் என தீர்ப்பளித்தது. இதையடுத்து பத்து மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழில் வெளியிடப்பட்டது.

 உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் விமர்சித்திருந்தார். சுப்ரீம்கோர்ட் என்ற சூப்பர் பாராளுமன்றமா? ஜனநாயக சக்திகளுக்கு எதிராக அரசியல்சட்டம் 142வது பிரிவு ஒரு அணு ஆயுத ஏவுகணை ஆகி விட்டது என்று அவர் கூறியிருந்தார். 

இதற்கு உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கவர்னர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியே. இதில் உச்சநீதிமன்றம் சூப்பர் பாராளுமன்றமாக செயல்படவில்லை. அரசியல் சட்டத்தின் 142வது பிரிவின்படி வகுக்கப்பட்டு உள்ள அசாதாரணமான அதிகாரங்களின் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றம் செயல்பட்டுள்ளது. நீதியை நிலைநாட்டவே அரசியல் சட்டம் 142வது பிரிவு உச்சநீதிமன்றத்துக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கி உள்ளது. தமிழ்நாடு வழக்கில் சுப்ரீம்கோர்ட் அந்த அதிகாரத்தை பயன்படுத்தியது சரியே... என்று நீதிபதி குரியன் ஜோசப் கருத்து கூறினார்.

 கவர்னர் ஒன்றும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல. 3 மாதங்களுக்குள் ஒரு மசோதாவை பரிசீலிக்கவேண்டும். ஆனால் கவர்னர் 3ஆண்டுகளாக கிடப்பில் போட்டிருந்தால், அரசியல்சாசனத்தையே தோல்வி அடையச்செய்து விட்டார் என்றே பொருள். அரசியல் சாசனத்தை தோல்வியுறச் செய்ய யாருக்கும் அனுமதி கிடையாது. யாராவது தவறிழைத்தால் அரசியல்சட்டத்தின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் சரியாகவே செயல்படுகிறது என்றும் நீதிபதி குரியன் ஜோசப் சுட்டிக்காட்டினார்.