tamilnadu epaper

சுடிதார்

சுடிதார்

திவ்யாவுக்கு அந்த செய்தியை கேட்டதில் இருந்து மனதில் உற்சாகம் தொற்றிக் கொண்டது.

 

 வேறொன்றும் இல்லை.

 

 சுடிதார் போட்டுக்கொண்டு பள்ளிக்கு வரலாம் என்ற உத்தரவு .

 

திவ்யா ஒரு சுடிதார் பிரியை. விதவிதமான சுடிதார்கள் வாங்கி குவிப்பாள். வேலைக்குச் செல்லும்போது அவைகளை அணிந்து கொண்டு போக வேண்டும் என்பது அவள் விருப்பம் .ஆனால் பள்ளி அதை அனுமதிக்கவில்லை.

 

 அதனால் அவளால் அவள் விருப்பப்பட்ட சுடிதாரை அணிந்து கொண்டு பள்ளிக்குச் செல்ல இயலவில்லை. சரி சுடிதார் போட்டுக்கொண்டு போனால் எப்படி எண்ணுவார்கள்?

 

 அந்த நேரத்தில்தான் இந்த செய்தி அவளுக்கு தேனாக காதில் வந்து பாய்ந்தது.

 

 இனிமேல் அவள் பட்டாம்பூச்சியாக விதவிதமாக சுடிதார் அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்லலாம்.

 

 மனசு உள்ளே மத்தளம் கொட்டியது .

 

இன்று சுடிதார் அணிந்து பள்ளி சென்றாயிற்று. 

 

          மாணவர்கள்," மிஸ் சூப்பரா இருக்கு!" என்றார்கள். 

 

தலைமை ஆசிரியர் "என்னம்மா சுடிதார்ல வந்து இருக்கீங்க? " என்று இயல்பான குரலில் கேட்டார். 

 

" போடலாம்னு சொல்லிட்டாங்க மேம்" என்றாள்.

 

"இல்லையே திருப்பி அதை கேன்சல் பண்ணிட்டாங்களேம்மா?" என்றார். 

 

"எப்ப மேம்?" என்றாள்.

 

 

"ஆனா புள்ளைங்க மதிக்க மாட்டாங்கம்மா "என்றார்.

 

 அருகில் நின்ற இன்னொரு ஆசிரியரும், " நீட்டா ..சாரி கட்டிக்கிட்டு வரும்போதே மதிக்க மாட்டேங்குறாங்க... நானெல்லாம் 'சுடிதார்' போட்டா அவ்வளவு தான்!" என்றார். 

 

ஓர் ஆண் ஆசிரியர், "புள்ளைகளுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் தெரியாதேம்மா ?" என்றார்.

 

 "சார்! நீங்களும் பையன்களும் ஒரே மாதிரி பேண்ட் ஷர்ட் தானே போடுறீங்க. வித்தியாசம் தெரியலையா?" என்றாள் திவ்யா. 

 

"ஆசிரியர்கள் மாணவர்களை விட குட்டையா ஒல்லியா இருந்தா மதிக்க மாட்டாங்களா?" என்றாள்.

 

" என்னை சொல்றீங்களா?" என்றார் அவர். 

 

"இல்ல சார்... 23, 24 வயசுல ஆசிரியரா வராங்களே அவங்களைச் சொன்னேன் என்றாள். நாம எப்படி நடந்துக்கிறோமோ, அத வச்சு தானே மரியாதை எல்லாம்.? உடையிலா இருக்கு ? "என்றவாறு கையெழுத்திட்டு விட்டு தலைமையாசிரியர் அறையை விட்டு வெளியே வந்தாள்.

 

ஓரிரு ஆசிரியர்கள் தாங்களும் சுடிதார் போடப் போவதாகச் சொன்னார்கள். மற்றவர்கள் யாரும் வாய் திறக்கவில்லை. 

 

ஓர் ஆண் ஆசிரியர் மட்டும், "

 

 எல்லாம் ஓகே தான். ஆனால், உங்களுக்கு சேலை தான் நல்லா இருக்கு "என்றார்.

 

" வசதியான உடை 'சுடிதார்' என்றாலும், குழந்தைக்குப் பாலூட்டும் பெண்களுக்கு மட்டும் சிரமம் " என்றார்.

 

 "அதற்கும் 'ஜிப்' மாடல் இருக்குது சார்" என்றாள் திவ்யா.

 

 மாணவர்களிடம்," நான் சுடிதார் போட்டால் மதிக்க மாட்டீங்களாடா? " - என்று கேட்டாள். 

 

"இல்ல மிஸ்.. எப்பவும் போல தான் இருப்போம் !"என்றனர்.

 

ஆர். சுந்தரராஜன்,

சிதம்பரம்-608001.