tamilnadu epaper

சென்னை மாணவ – மாணவி ராமேஸ்வரம் கடலில் நடனம்

சென்னை மாணவ – மாணவி  ராமேஸ்வரம் கடலில் நடனம்


ராமேஸ்வரம், ஏப். 30–

உலக நடன தினத்தை முன்னிட்டு, சென்னை, நீலாங்கரையை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி, ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஆகியோர், ராமேஸ்வரம் கடலுக்குள் நாட்டியம் ஆடி அசத்தினர்.


சென்னை, நீலாங்கரையை சேர்ந்தவர் அரவிந்த், 43; ஆழ்கடல் பயிற்சியாளர். கடல்வளத்தை பாதுகாக்க, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவரது மகள் தாரகை ஆராதனா, 10. நேற்று உலக நடன தினத்தையொட்டி, தாரகை ஆராதனா மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அஸ்வின் பாலா ஆகியோர், ராமேஸ்வரம் கடலில் 20 அடி ஆழத்தில் நடனம் ஆடினர். இவர்கள், ஐந்து பாடல்களுக்கு நடனமாடினர். சுவாச உபகரணங்கள் அணியாததால், 30 முதல் 40 வினாடி வரை மூச்சை அடக்கி ஆடினர்.


தாரகை ஆராதனா, அஸ்வின் பாலா ஆகியோர் கூறியதாவது:

ஒவ்வொரு முறையும், கடலோர பாதுகாப்பு துறை அனுமதி பெற்று கடலுக்குள் செல்வோம். முந்தைய நிகழ்ச்சிகளில் சுவாச உபகரணங்கள் அணிந்து சென்றோம். நடனம் ஆட சுவாச உபகரணங்கள் அணிய முடியாததால், மூச்சை அடக்கி நடனம் ஆடிவிட்டு, வெளியே வந்து சுவாசித்துவிட்டு மீண்டும் உள்ளே சென்று நடனம் ஆடினோம்.


இது வித்தியாசமான அனுபவம். கடல் மாசு, கடல்வாழ் உயிரின பாதுகாப்பை வலியுறுத்தி தொடர்ந்து விழிப்புணர்வு நடத்துகிறோம். பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி வருகிறோம். கடல் பாதுகாப்பு குறித்து மக்கள் அதிகளவு தெரிந்து கொள்ள வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.