வீட்டிற்குள் நுழைந்த லதா அங்கே டீப்பாயின் மீது வைக்கப்பட்டிருந்த ஐம்பதுக்கும் மேலான சோப்பு பவுடர் பாக்கெட்டுகளைப் பார்த்துல் கத்தினாள்.
"நீங்க என்ன கடையா வைக்கப் போறீங்க?... எதுக்கு இத்தனை பாக்கெட்டுகளை வாங்கில் குவிச்சிருக்கீங்க?"
"அது...வந்து... ஒரு சேல்ஸ் கேர்ள் வந்தா" குமார் சொல்ல.
"ஓ அவளைப் பார்த்ததும் ஜொள் விட்டுட்டு... பெரிய தாராள பிரபு மாதிரி "எல்லாத்தையும் வாங்கிக்கிறேன்"னு சொல்லி சீன் போட்டிருக்கீங்க... அப்படித்தானே?" லதாவின் கண்களில் பொறி பறந்தது.
"பவுடர் நல்லா இருந்துச்சு...அதான்".
"பவுடர் நல்லா இருந்துச்சா... இல்லை பவுடர் கொண்டு வந்தவ நல்லா இருந்தாளா?".
சில நிமிடங்கள் அமைதியாய் லதாவின் கத்தலைக் கேட்டு முடித்த குமார், சட்டை பாக்கெட்டிலிருந்த மொபைலை எடுத்து, தன் வீட்டு வாசற்கதவிற்கு வெளியே உள்ள சி.சி.டி.வி. கேமராவின் ஃபுட்டேஜைத் தேடிப் பிடித்து அவளிடம் நீட்டினான். "இவள்தான் அந்த சேல்ஸ் கேர்ள்"
"வெடுக்"கென்று மொபைலைப் பறித்துப் பார்த்த லதா அதிர்ந்தாள்.
அவள் அக்கா சினேகாதான் சேல்ஸ் கேர்ளாக வந்திருந்தாள்.
சில வருடங்களுக்கு முன் எவனையோ காதலித்து, அவனுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவளுக்கு, அந்த கயவன் ஒரு கல்யாண மன்னன் என்பதும், ஏற்கனவே ஐந்தாறு பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றியவன் என்பதும், தெரிய வர தைரியமாய் அவனைப் பற்றிய உண்மைகளை வெளிக் கொணர்ந்து, போலீசில் சிக்க வைத்து, சிறைக்கு அனுப்பியவள் லதாவின் அக்கா சினேகா.
அதற்குப் பிறகு பல பேர் சென்று பலமுறை கேட்டுக் கொண்டும், "நோ... என் உயிரே போனாலும் நான் திரும்பவும் என் குடும்பத்தோட போய்ச் சேர மாட்டேன்!.. அன்னிக்கு நான் செஞ்ச செயலால் என் குடும்பத்தோட மானம் மரியாதை எல்லாம் காத்துல போச்சு... என்னைப் பெத்தவங்க அப்ப எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாங்கன்னு இப்பப் புரியுது!... அதனால என் தப்புக்கு தண்டனை எனக்கு நானே கொடுத்துக்கறேன்!.. இனிமேல் வாழ்க்கை பூராவும் நான் தனியா வாழ்வதுதான் அந்த தண்டனை!" என்று கூறிவிட்டு ஒரு பெண்கள் ஹாஸ்டலில் தங்கி சேல்ஸ் கேர்ளாக பணிபுரிந்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறாள் சினேகா.
"ஏங்க அவளுக்கு நீங்க யாருன்னு தெரிஞ்சிடுச்சா?" லதா கேட்க,
"இல்லை அவளுக்கு என்னைத் தெரியலை!..ஆனா அவளை எனக்கு தெரிஞ்சிடுச்சு... எத்தனை போட்டோவுல நீயே எனக்கு காண்பிச்சிருக்கே!"
லதா திரும்பி டீப்பாய் மீதிருந்த சோப்பு பவுடர் பாக்கெட்டுகளை பார்க்க.
"அத்தனையையும் விற்க உங்க அக்கா ஈவினிங் வரைக்கும் கொளுத்துற இந்த வெயில்ல தெருத்தெருவா அலையணுமல்ல்?.. அதான்.. பார்த்தேன், "சரி நாமே அத்தனையையும் வாங்கிக்கிட்டா அவளுக்கு அலைச்சல் மிச்சம்தானேன்னு நானே வாங்கிட்டேன்!... தப்பா லதா?" குமார் கேட்க.
சட்டென்று அவனை இறுக அணைத்துக் கொண்டவள், "உங்களை மாதிரி ஒருத்தர் எனக்குப் புருஷனாக் கிடைக்க நான் குடுத்து வெச்சிருக்கணும்ங்க" என்றாள்.
-முகில் தினகரன்,
கோயம்புத்தூர்.