காய்கறி மார்க்கெட்டில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டிருந்த சுலோச்சனாவின் பார்வை எதிர்க்கடையில்
பழம் வாங்கிக் கொண்டிருந்த
புவனாவின் மீது பட்டது.
" ஏய் புவி!" என்று கூப்பிடவும்
யார் தன்னைக் கூப்பிடுவது பழகிய குரலாக இருக்கிறதே என்று புவனா பார்க்கவும் சரியாக இருந்தது. "அடடே! சுலோ உன்னைப் பார்த்து எத்தனை நாள் ஆச்சு? ஒரே ஊரில் இருந்தும் கூட சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குது!""
என்று புவனா அங்கலாய்க்க "ஆமா புவி! எங்கே நேரம் கிடைக்குது?
வீட்டு வேலையே சரியா போயிடுது"என்றாள் சுலோச்சனா.
புவனா திடீரென்று நினைவுக்கு வந்தவளாய் "ஆமா நீதான் ரொம்ப
வசதியானவளாச்சே! எதுக்காக கடைக்கு எல்லாம் வர்றே ? வேலைக்கு இருக்கிறவங்கள கடைக்கு அனுப்பி வாங்கி வரச் சொல்லிட்டு 'ஹாயா' உட்காராம ஏன் இந்த மாதிரி பண்ற? "என்று கேட்டாள்.
"என்ன பண்றது புவனா? ஆளுங்கள நம்பி வேலைக்கு வச்சா கடைக்குப் போகும்போது அவங்க நம்பள ஏமாத்திட்டு கமிஷன் அடிக்கிறதே குறியா இருக்காங்க.
ரொம்ப நாளா வேலைக்கு இருந்த
ஒருத்தி கமிஷன் அடிக்கிறதைப் பார்த்து கையும் களவுமாகப் பிடித்து வெளியே அனுப்பிட்டேன். அதுல இருந்து யாரையும் வேலைக்கு வச்சுக்காம நானே எல்லா வேலையையும் பார்க்கிறேன் "என்றாள் சுலோச்சனா .
"ஒருத்தர் அந்த மாதிரி பண்ணினா எல்லாருமா அதே மாதிரி பண்ணுவாங்க ? வேற நல்ல ஆளா வேணும்னா நான் பார்க்கட்டுமா? "என்று புவனா கேட்கவும் "அதெல்லாம் வேண்டாம். நானே பார்த்துக்கிறேன். அதுவும் இல்லாம அந்தப் பெண்ணை வேலையில் இருந்து நிறுத்திய பிறகு ஒவ்வொரு முறையும் நான் கடைக்கு வரும்போது அவள் எவ்வளவு கமிஷன் அடிப்பாள் என்று தோராயமாகக் கணக்குப் போட்டு தனியா எடுத்து வைத்த பணம் ஆயிரக்கணக்கா சேர்ந்திருக்கு . அவ இருந்திருந்தால் இந்த மாதிரி பணம் சேர்ந்து இருக்குமா?"
என்று சுலோச்சனா சொல்லவும்
'அடிப்பாவி ! நீ எவ்வளவு பெரிய பணக்காரியா இருந்தாலும் மனச ளவுல ரொம்ப சின்ன புத்தி படைச்சவளா இருக்கியே' என்று நினைத்தவாறு அந்த இடத்தை விட்டுப் புறப்பட்ட புவனாவை "ஒரு நிமிஷம்" என்ற
சுலோச்சனாவின் குரல் தடுத்து நிறுத்தியது.
"புவி ! நாளைக்கு காலைல .வீட்டுக்கு வா! முன்னே வேலைக்கு இருந்த அந்தப் பெண்ணோட வீட்டுக்குப் போலாம். அவளை அழைச்சிக்கிட்டு முதியோர் இல்லத்துக்கு போய் அவ கையாலேயே அந்த பணத்தில்
துணிமணிகள் வாங்கி அவர்களுக்கு கொடுக்கச் சொல்லலாம். மறுபடியும் அவளை ஒழுங்காக இருக்குமாறு சொல்லி
வேலைக்கு சேர்த்துக்கலாம். இதுதான் நான் அவளுக்கு கொடுக்கும் 'தண்டனை' " என்று கூறவும் தான் அவளைத் தவறாக நினைத்ததை எண்ணி கண்ணீர் ததும்பப் பார்த்தாள் புவனா .
மு.மதிவாணன்
குபேந்திரன் நகர்
அரூர் 636903