tamilnadu epaper

தனி குடுத்தனம்

தனி குடுத்தனம்

 

            "நான் எவ்வளவு சொன்னாலும் 

நீ கேட்கமாட்ட... ஓயாம எல்லா வேலையையும் இழுத்து போட்டுக்கிட்டு ஏன் கஷ்டபடுற..." பெருமாள் தன் மனைவி அம்புஜம் அம்மாளிடம் சொல்லியும்,

         " ஏங்க நம்ம வீட்டு வேலைய நாம செய்யாம யாரு செய்றது..." 

          "நம்ம வீட்டு வேலதான். ஒத்துக்குறன்

அத்துக்குன்னு ரெண்டு மருமகள வீட்டுல வச்சிக்கிட்டு அவங்க வேலைய நீ ஏன்

செய்ற..."

           "விடுங்க...ரெண்டும் கல்யாணம் ஆன புதுசு அப்படித்தான் இருப்பாங்க ...கூட்டு குடும்பத்துல இதெல்லாம் கண்டுக்காதீங்க... அம்புஜம் அம்மாள் பெருமாள் சொல்லை கேட்பதாக இல்லை.

             போதுவாகவே இரண்டு மருமகளும்

போட்டிபோட்டுக் கொண்டு, 'பெரிய

 மருமகளுக்கு இல்லாத அக்கறையா' என்று

சின்னவளும், 'நேத்து வந்தவ...என்னைவிட

 சின்னவ... அவ செய்யட்டுமே என்று பெரியவளும் வேலை செய்யாமல் இருக்க என்ன வழியோ அதை இரண்டு மருமகளுமே கையாண்டு வந்தனர்.

             "என்னம்மா மணி எட்டு ஆவுது...

எழுந்திரிச்சி டீ போட்டு புருசனுக்கு கொடுத்துட்டு நீங்களும் குடிக்கலாமில்ல

அதை கூடவா நான் செய்யணும்... 

அம்புஜம் அம்மாள் மருமகள் இருவரிடமும் கேட்டதற்கு,

              ' இதுக்குத்தான் நாங்க தனி குடுத்தனம் போகலான்னா உங்க புள்ளைங்க கேட்டாங்களா...'புருஷனிடம் சண்டைக்கு போவாளுங்க..."

இதுக்கு பயந்துகொண்டு "நமக்கு ஏன் வீண் வம்பு...நம்ம கஷ்டம் நம்மளோட போகட்டும்"

என்று அம்புஜம் அம்மாளும் காலம் தள்ளினாள்.

            ரெண்டு மருமகளும் கூட்டு சேர்ந்துகொண்டு நாளுக்கு நாள் அம்புஜம் அம்மாளை வேலைக்காரியாகவே ஆக்கி விட்டனர்.காப்பி குடித்த கிளாஸை கூட கழுவாமல் அப்படியே போட்டுவிட்டு போகும் அளவிற்கு அவர்களின் அராஜகம் அதிகமாயிற்று.

             ஒருநாள் அம்புஜம் அம்மாளுக்கு

முடியாமல் படுத்திருந்தும், என்ன ஏதுன்னு

கேட்கக்கூட அருகில் வரவில்லை.மாறாக,

"வேஷம் போடுது கிழவி...நம்ம வேல

செய்றோமா இல்லையான்னு செக் பண்ணுது... அவர்கள் பேசுவதை கேட்டவுடன் தான் அம்புஜம் அம்மாளுக்கு

கோபம் வந்தது.

            "நீங்க சொன்னது சரியா போச்சிங்க...

வயித்து பொழப்புக்கு வழி இல்லன்னா

நாம இங்க வந்து கெடக்குறோம்...ஏதோ

சின்னஞ்சிறுசுக ஒத்தாசையா இருப்போம்முன்னு இருந்தா..ரொம்பத்தான் பண்ணுதுவ...இதுக்கு மேல இங்க இருந்தா நமக்கு மரியாத இல்ல...வாங்க தனி வீடு பாத்துகிட்டு தனியா போயிடுவோம் முடிவாக பெருமாளிடம் சொன்னாள் அம்புஜம் அம்மாள்.

 

சுகபாலா

திருச்சி