மகாபாரதம் முடிந்துவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா ? இல்லை உண்மையான முடிவு இப்போதுதான் தொடங்குகிறது கலியுகத்தில் மனிதன் பின்பற்ற வேண்டிய ஒழுக்க முறைகள் தனிமனித வாழ்க்கைக்கு தேவைப்படும் தர்ம நெறிகள் இவை அனைத்திற்கும் இந்த பயணம் மிகப்பெரிய பாடமாக அமைகிறது. தர்மம் மட்டுமே மனிதனை உயர்த்தும் ஆனால் தர்மத்தின் பாதையில் செல்லும் சோதனைகள் எவ்வளவு கடுமையானவை என்பதை இந்த கதையின் மூலம் உணரலாம்.
பாண்டவர்கள் தர்மயுத்தத்திற்கு பிறகு அவர்களின் கடைசி பயணம் எப்படி அமைந்தது? ஏன் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தார்கள் ? இறுதியில் யார் சொர்கத்தை அடைந்தார் ? எந்த காரணத்திற்காக பாண்டவர்கள் உயிரிழந்தார்கள்? இந்த பயணத்தின் உண்மைகளை நீங்கள் அறிந்த பிறகு உங்கள் வாழ்க்கையைப் பற்றிய பார்வையே மாறிவிடும். இந்த கட்டுரையின் இறுதியில் உங்கள் மனதை நெகிழ வைக்கும் ஒர் ஆழமான உண்மை வெளிப்படும், அது தர்மத்தை பற்றியே உங்கள் எண்ணங்களை முற்றிலும் மாற்றக்கூடும். அதனால் ஒரு வரிகூட தவறவிடாமல் இந்தக் கட்டுரையை கடைசிவரை கவனமாக வாசிக்கவும்.
கிருஷ்ணர் மறைந்த பிறகு அர்ஜுனன, வியாச முனிவரின் வார்த்தைகளால் வாழ்க்கையின் உண்மையான நோக்கை உணர்கிறான்.
"அர்ஜுனா நீங்களும் உங்கள் சகோதரர்களும் தர்மத்தை நிலை நிறுத்த கிருஷ்ணருக்கு உதவினீர்கள். இப்போது தர்மம் நிலைத்திருப்பதால் உங்கள் கடமையும் முடிந்தது. அடுத்த தலைமுறையினருக்காக நீங்கள் மீதம் உள்ளதை விட்டுச் செல்லுங்கள்" என்று கூறுகிறார் வியாச முனிவர்.
தர்மர் இதனை ஏற்றுக்கொண்டு, "கிருஷ்ணரின் பணி முடிந்தது. இப்போது நாங்கள் உலகத்தை துறந்து அமைதியாக வாழ நேரம் வந்துவிட்டது" என்று கூறினார். இது ஒரு தீர்க்கமான முடிவு.
பாண்டவர்கள் திரவுபதியுடன் அஸ்தினாபூரிலிருந்து புறப்பட்டு துவாரகாவை அடைந்தனர். அழிந்த துவாரகா நகரத்தைக் கண்டு மனம் உடைந்தனர். பின்னர் ரிஷிகேஷ் வழியாக இமயமலையை நோக்கி பயணித்தனர். ஆனால் அவர்கள் எதிர்கொள்ள இருந்த சோதனைகள் எந்த அளவிற்கு கடுமையானவை என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. மேரு மலையை கடந்து சொர்க்கத்தை அடைய அவர்கள் திட்டமிட்டனர். அப்போது ஒரு நாயும் அவர்களுடன் சேர்ந்து கொண்டது. பாண்டவர்களும் திரவுபதியும் அந்த நாயுடன் இமயமலையில் ஏறும் போது மேரு மலையை அடைவதற்கு முன் திரவுபதி கீழே விழுந்து உயிரிழந்தாள்.
அதிர்ச்சியடைந்த பீமன், "தர்மா..... திரவுபதி ஏன் சொர்க்க பயணத்தை முடிக்க முடியவில்லை ?" என்று கேட்டான்.
தர்மர் அமைதியாக கூறினார் "அவள் அனைவரையும் சமமாக நேசிப்பேன் என்று உறுதி அளித்திருந்தாள். ஆனால் அவள் அர்ஜுனனை மட்டுமே அதிகமாக நேசித்தாள். அதனால் தான் அவள் முதலில் உயிரிழந்தாள்"
அர்ஜுனன் இதைக் கேட்டதும் கதறி அழுதான். திரவுபதியிடம் பாசம் இருந்தபோதிலும் அவள் தங்களுக்காக மட்டுமே பாசம் காட்டவில்லை என்ற உணர்வு இப்போது அவர்களுக்கு வலியாக மாறியது, இதுவே முதல் மரணம். ஆனால் இது தொடர்ந்து கொண்டிருந்தது. பயணத்தின்போது சகாதேவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
"தர்மா, அவர் நேர்மையானவர், அறிஞர், நல்லவர் ஆனால் அவரால் ஏன் சொர்க்கத்தை அடைய முடியவில்லை ?" என்று நகுலன் கேட்டான்.
"சகாதேவர் எப்போதும் நல்லொழுக்கம் உள்ளவராக இருந்தார். அவர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மிகவும் நேர்மையாகவும் நல்லவராகவும் இருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சகாதேவர் தனது ஞானத்தில் பெருமை கொண்டார். தனது ஞானத்திற்கு இணையானது எதுவும் இல்லை என்று அவர் நினைத்தார். ஆனால் தர்மத்தை பொறுத்தவரை வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் அனைவரையும் சமமாக கருத வேண்டும். இதில்தான் அவர் தோல்வி அடைந்தார்" என்று கூறினார் தர்மர்.
சகாதேவனின் மரணத்திற்குப் பிறகு நகுலனும் உயிரிழந்தான். அர்ஜுனனும் பீமனும் அவரை மிகவும் நேசித்தனர். அர்ஜுன், "ஓ சகோதரனே, அவன் கனிவானவன். அனைவரையும் நேசித்தவன். அவன் ஏன் இறந்தான்?" என்று கேட்டான்.
"அவன் தன் அழகில் பெருமை கொண்டான். உலகிலேயே மிக அழகானவன் என்று நினைத்தான். நகுலன் முகத்தில் உள்ள வித்தியாசத்தை பார்த்திருக்கக் கூடாது. தோலில் உள்ள வேறுபாடுகளை கண்டு அழகில் தன்னை எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை அவர் கருதுவதன் மூலம் தருமத்தை அவர் பின்பற்ற தவறிவிட்டார், ஆனால் தர்மத்தின் அடிப்படையில் அனைவரும் சமம் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளவில்லை" என்று நகுலன் பின்பற்ற தவறிய காரணத்தை தர்மர் விளக்கினார்.
மேருமலைக்கு செல்லும் வழியில் அடுத்ததாக அர்ஜுனன் விழுந்து உயிரிழந்தான். "தர்மா, அவன் தர்மத்திற்காக வாழ்ந்தவன். ஒருபோதும் உங்கள் கட்டளையை அல்லது கிருஷ்ணரின் வார்த்தைகளை அவன் மீறவில்லை. அவன் சொர்க்கத்தை அடைய முடியவில்லை." என்று பீமன் சோகத்துடன் கேட்டான்.
"அவன் சிறந்த வில்வீரன் என்ற ஆணவத்தை கொண்டிருந்தான். கர்ணனும் ஏகலைவனும் அவனைவிட சிறந்தவர்கள் என்பதை ஏற்கவில்லை. அவன் அனைத்துலகிலும் சிறந்த வில்வித்தை வீரன் என்று தன் மீதே பெருமிதம் கொண்டான். அர்ஜுனால் அந்த எண்ணத்திலிருந்து மீண்டு வரமுடியவில்லை. கற்றவர் எவரும் அதில் பெருமைப்படவோ அல்லது ஆணவம் கொள்ளவோ கூடாது" என்று பீமனுக்கு தர்மத்தின் அற்புதத்தை விளக்கினார். நாயுடன் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
பீமன் சோர்வடைகிறான். அவன் மேலே செல்லமுடியாமல் கீழே விழுகிறான். தர்மரைப் பார்த்து "தர்மா நான் ஏன் சொர்க்கத்தை அடைய முடியவில்லை....?" என்று கேட்டான்.
அதற்கு தர்மர், "பீமா..... நீ உணவில் பேராசை கொண்டிருந்தாய். பிறரின் பசியைப் பற்றி நினைக்கவில்லை. பகிர்ந்து உண்ணும் மனப்பான்மை வேண்டும். அதில்தான் நீ தவறினாய்" என்று கூற, பீமன் தர்மரின் கைகளில் உயிரிழந்தான்.
தர்மர் நாயுடன் நீண்ட பயணத்தை தொடர்ந்தார். அவர்கள் மேரு மலையின் உச்சியை அடைய இருந்தபோது இந்திர பகவான் தனது தேரில் வந்தார். "தர்மத்தை பின்பற்றுவதில் உங்கள் நடைமுறைகள் குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் மனைவியும் சகோதரர்களும் பாவம் செய்ததால் நரகத்தில் உள்ளனர். அவர்கள் தங்கள் பாவங்களுக்காக நரகத்தில் தங்கள் நேரத்தை கழித்த பிறகு சொர்க்கத்தை வந்தடைவார்கள். இனி நடக்க வேண்டிய அவசியமில்லை. நான் தேறில் எற்றி சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வேன். தேரில் அமருங்கள்" என்று இந்திர பகவான் தர்மரை அழைத்தார்.
"நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். ஆனால் தயவு செய்து எனது மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் காரணமாகவே நான் தர்மாவை பின்பற்றினேன். அவர்கள் ஒருபோதும் என்னை மாற்ற முயற்சிக்கவில்லை. அவர்கள் என் வார்த்தைகளை நம்புவதை ஒருபோதும் நிறுத்தவில்லை. அது சொர்க்கமாக இருந்தாலும், எனது மனைவிக்கும் சகோதரர்களுக்கும் இடம் இல்லாத இடத்தில் நான் இருக்க விரும்பவில்லை" என்று தாழ்மையுடன் தர்மர் கூறினார்.
இந்திரன் புன்னகைத்து "நீங்கள் அவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. அவர்கள் தங்கள் நேரத்தை நரகத்தில் கழித்த பிறகு இப்போது அவர்கள் அனைவரும் சொர்க்கத்தில் உள்ளனர். எனவே நீங்கள் தேரில் ஏறுங்கள். நான் உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறேன்" என்று கூறினார்.
ஆனாரல் தர்மர் ஒரு கேள்வி கேட்டார். அவர் ராஜ்யத்தை துறந்த நாளில் இருந்து தன்னை பின்தொடர்ந்த நாயை பார்த்தார். இந்த நாயும் தன்னுடன் தேரில் வரமுடியுமா என்று இந்திரனிடம் கேட்டார்.
இந்திரன் மறுத்துவிட்டார். "நாய்கள் ரதத்திற்குள் நுழைய முடியாது. உங்கள் சொந்த நிலை மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறீர்கள், தேரில் ஏறுங்கள், நாயைக் கை விடுங்கள்" என்று இந்திரன் வலியுறுத்தினார்.
"தயவு செய்து என்னை மன்னியுங்கள். நான் நாயை விட்டு போகமுடியாது. நான் ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறிய தருணத்தில் இருந்து இந்த நாய் என்னை பின்தொடர்ந்து வருகிறது. என் சகோதரர்கள் மற்றும் திரவுபதியின் மரணத்திற்குப் பிறகும் என்னுடன் உள்ளது. நான் தனியாக இருந்தபோது அது எனக்கு ஒரு நிலையான தோழனைப் போல இருந்தது. நான் ஒரு நண்பரை கைவிட முடியாது, ஏனென்றால் ஒரு நண்பனை விட்டுக் கொடுப்பது ஒரு பெரிய பாவமாகும். நான் எவ்வளவு நேரம் எடுத்தாலும் நாயுடன் நடந்து செல்வேன் என்று தாழ்மையுடன் தர்மர் கூறினார்.
இந்த வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருந்த அந்த நாய் திடீரென்று எமதர்மராஜனாக மாறியது. "அன்புள்ள மகனே, நான் உன்னை பற்றி பெருமிதம் கொள்கிறேன். நீ மிகவும் தாழ்மையான, எளிமையான மற்றும் நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்தாய். வாழ்நாள் முழுவதும் எல்லா சூழ்நிலைகளிலும் தர்மத்தை பின்பற்றினாய். ஒரு மனிதன் எந்த குடும்பத்தை சேர்ந்தவர், அவருக்கு எத்தனை அன்புக்குரியவர்கள் மற்றும் உறவினர்கள் இருந்தாலும், வாழ்வதற்காக அவர் என்ன செய்தாலும் இறுதியில் அவரது தர்மம் மட்டுமே அவரை பின்பற்றி சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். உன் மகிழ்ச்சியையும் வளமான வாழ்க்கையையும் இழந்தாலும் நீ அத்தகைய வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறாய். தேரில் ஏறிச் செல், இந்திரன் சொர்க்கத்திற்கு உன்னை அழைத்துச் செல்வார்" என்று எமதர்மர் பெருமையுடன் கூறினார்.
இறுதியில் தர்மர் இந்திரனுடன் தேறில் ஏறி சொர்க்கத்திற்குச் சென்றார். அங்கு அவரது சகோதரர்களும், திரவுபதியும், கர்ணனும் இருந்தனர். இறுதியாக அவர் சொர்க்கத்தில் நித்திய அமைதியை கண்டார்.
தருமத்தின் பாதையை பின்பற்றுவது எவ்வளவு முக்கியம் என்பதை மானிடர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து நமது வாழ்க்கையை செம்மைப் படுத்த உறுதி கொளவோம்.
*ஆர். ஹரிகோபி, புது டெல்லி*