"அதுக்காக" />
எடிட்டர் அறை.
"ம்மா... உன் அக்கா இறந்தது காலாவதியான மாத்திரையை தின்னுதான்'ன்னு எங்களுக்கும் தெரியும்... இருந்தாலும் "பருவப் பெண் தற்கொலை"ன்னு போட்டால்தான் எங்க பேப்பர் விற்கும்".
"அதுக்காக பொய் செய்தி போடுவீங்களா சார்?" இந்து கத்தினாள்.
"அதான் அடுத்த நாளே தவறுதலாக செய்தி வந்து விட்டதுன்னு கட்டம் போட்டு ஸாரி தெரிவிச்சிட்டோமே?".
"நீங்க போட்ட அந்தப் பொய்ச் செய்தியால என் கல்யாணம் கேள்விக்குறியாயிடுச்சே சார்!.. வர்றவனெல்லாம் "அக்கா தற்கொலையாமே?"ன்னுட்டு ஓடுறானுக!".
"தப்பா செய்தி போட்டுட்டோம்! அதுக்கு ஸாரியும் கேட்டுட்டோம்!.. மேட்டர் ஓவர்.... நீ கெளம்பு!"விரட்டினார் எடிட்டர்.
வெளியே வந்த இந்து ரிசப்ஷன் பெண்ணிடம் தன்னை எடிட்டரின் ரிலேட்டிவ் என்று கூறி எடிட்டரின் மனைவி மொபைல் நம்பரைக் கேட்டாள்.
"மேடம்க்கு நேற்றுத்தான் ஹார்ட் ஆபரேஷன் பண்ணியிருக்காங்க... அவங்க யாரு கூடவும் இப்பப் பேச மாட்டாங்க!"
"அதை விசாரிக்கத்தான் போன் நம்பர் கேட்கிறேன்"
ரிசப்ஷன் பெண் லேசாய்த் தயங்கி விட்டு, பின்னர் என்ன நினைத்தாலோ... எடிட்டர் மனைவி எண்ணைத் தர, வாங்கிக் கொண்டு வெளியேறினாள் இந்து.
"ஹலோ... எடிட்டர் சம்சாரமா?"
"ஆ....மா.... ம்".
"எடிட்டர் சாருக்கு திடீர்னு நெஞ்சு வலி வந்துருச்சு.... ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனோம்.... போற வழியிலேயே இறந்துட்டாரு!"
மறுமுனையில் "அய்யோ" என்ற ஓலமும், "தடால்" என அப்பெண் விழும் ஓசையும் கேட்க, அந்தக் காலை கட் செய்து விட்டு எடிட்டருக்கு கால் செய்தாள் இந்து.
"சார்.... ஒரு செய்தி தவறுதலாக உங்க மிஸஸுக்கு கன்வே ஆயிடுச்சு!... அதுக்காக.... ஸாரி கேட்டுக்கறேன்.... மேட்டர் ஓவர்"
இணைப்பை கட் செய்த எடிட்டர் தன் மனைவிக்கு கால் செய்ய அது தொடர்ந்து எங்கேஜ்டாகவே இருந்தது.
(முற்றும்)
முகில் தினகரன், கோவை