tamilnadu epaper

திகில் கதை*

திகில் கதை*

பிரபல வார இதழில் 99 வார்த்தைகளில் ஒரு பக்க திகில் கதைப் போட்டி அறிவித்திருந்தார்கள்- வாட்ஸ்அப்பில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்ற நிபந்தனையுடன்!

         ஒரு பக்கக் கதை எழுதுவது என்றால் எனக்கு அல்வா சாப்பிடுவது போல். அதிலும் திகில் கதை எழுதுவது என்றால் அமிர்தமே சாப்பிடுவது போல்.

          மாலையில் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் சூடாக ஒரு கப் காஃபி சாப்பிட்டுவிட்டு கதையை உருவாக்க கைப்பேசியுடன் அமர்ந்தேன்.

           வித்தியாசமான கருவாக இருக்க வேண்டுமே என வெகுநேரம் யோசித்தேன். போட்டியில் எப்படியும் வென்றே ஆகவேண்டும் என்ற ஆவல்.

             "உங்களுக்கு வேற வேலையே இல்லையா.... எப்பப் பாரு... செல்போனை நோண்டிக்கிட்டு..." முணுமுணுத்தவாறே கடந்து சென்ற என் தர்மபத்தினியை கண்டுகொள்ளாமல் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன்.

                அட்டகாசமான கரு கிடைக்க அரைமணி நேரத்தில் ஒரு திகில் கதையை டைப் செய்து வாட்ஸ்அப்பில் அனுப்பினேன்.

                  அனுப்பிய அடுத்த நிமிடம் அதிர்ந்தேன்.

                    கதை டபுள் டிக் ஆகியிருந்தது- ரத்த சிவப்பு நிறத்தில்!

 

 

*-ரிஷிவந்தியா,*

  *தஞ்சாவூர்.*