திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
சென்னை: “திமுக தலைவர் எனக்கு கொடுத்திருக்கும், இந்த அங்கீகாரமானது, நான் இன்னும் மேலும் கடுமையாக கட்சிக்காக உழைத்து, இன்னும் பலரை கட்சியில் இணைத்து திமுக என்கிற இந்த தவிர்க்க முடியாத சக்தி மேலும் வலிமை பெற உழைப்பதற்கானது. அதுவே என் கடமை. எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பதவியை, நான் ஒரு பொறுப்பாக கருதுகிறேன்” என்று அக்கட்சியின் புதிய துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா கூறியுள்ளார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டு, அப்பொறுப்பில் திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சிவா கூறியதாவது: உழைப்புக்கு எப்போதும் அங்கீகாரம் உண்டு. இந்த நம்பிக்கை எல்லா காலத்திலும் திமுகவில் இருப்பவர்களுக்கு உண்டு. என்னைப் பொருத்தவரை, இதுநாள் வரை கட்சியில் நான் எதையும் கேட்டு அவர்கள் தந்தது இல்லை. தானாகவேதான், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் தந்திருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலினும், அப்படித்தான், எனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும், தற்போது இந்தப் பதவியையும் எனக்கு தந்திருக்கிறார். ஆர்வம், விடாமுயற்சி மற்றும் நேர்மைக்கான வெகுமதி திமுகவில் எப்போதும் அளிக்கப்படுகிறது. திமுக தலைவர் எனக்கு கொடுத்திருக்கும், இந்த அங்கீகாரமானது, நான் இன்னும் மேலும் கடுமையாக கட்சிக்காக உழைத்து, இன்னும் பலரை இந்த கட்சியில் இணைத்து திமுக என்கிற இந்த தவிர்க்க முடியாத சக்தி மேலும் வலிமை பெற உழைப்பதற்கானது. அதுவே என் கடமை.
முதல்வர் ஸ்டாலின் கூறுவது போல, எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பதவியை, நான் ஒரு பொறுப்பாக கருதுகிறேன். பொறுப்பு வரும்போதே அதனுடன் கடமைகளும் அதிகமாக வருவதை நான் உணர்ந்திருக்கிறேன். கட்சியை வளர்க்க என் கடமைகள் மேலும் வேகமாக தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.