திருமலை, மார்ச் 31–
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் குறைவான நாட்களில் குறைந்தது ஒரு மணி நேரம் முதல் 4 மணி நேரத்திற்குள் சாமி தரிசனம் செய்ய முடியும். அதே சமயம் கூட்டம் அதிகமாக காணப்படும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்கின்றனர். எனவே விஐபி தரிசனத்தை குறைத்து சாதாரண பக்தர்கள் எளிதாக ஏழுமலையான தரிசனம் செய்யும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன்படி நாளை முதல் ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. ஜூன் 30 ம் தேதி வரை 3 மாதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து நடைமுறையில் இருக்கும். விஐபி பிரேக் தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் மார்ச் 31 (இன்று) முதல் ஏற்கப்படாது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கோடை காலம் என்பதால், பக்தர்களால் நீண்ட நேரம் காத்திருக்க முடியாது. சமீபத்தில் கூட்ட நெரிசலால் தமிழக கோவில்களில் சிலர் உயிரிழந்ததால், முன் எச்சரிக்கையாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்துள்ளது.