கோவிலின் தனிச் சிறப்பு:
நினைத்தாலே முக்தி தரும் ஆலயம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம். ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி உள்ளது.
திருவண்ணாமலை ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்:
திருவண்ணாமலை ஆலயம் இப்போது 24 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது.
இதிகாச காலத்தில் மகிழம் மரத்தடியில் ஈசன் சுயம்புலிங்கமாக தோன்றினார். அதனால்தான் மகிழ மரம் தல விருட்சமாக உள்ளது.
அடி, முடி காண முடியாதபடி, ஆக்ரோஷமாக, தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து மலையாக மாறியபோது அவரிடம் விஷ்ணுவும், பிரம்மாவும், “இவ்வளவு பெரிய மலையாக இருந்தால் எப்படி மாலை போட முடியும்? எப்படி அபிஷேகம் செய்ய முடியும்?” என்று கேட்டனர்.
இதைத் தொடர்ந்தே ஈசன், மலையடி வாரத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றினார்.
முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கம் சிறு மண்சுவர் கோவிலாக இருந்தது.
4-ம் நூற்றாண்டில் கருவறை, செங்கல்லால் கட்டப்பட்டது. 5-ம் நூற்றாண்டில் அது சிறு ஆலயமாக மேம்பட்டது.
6, 7, 8-ம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் அண்ணாமலையார் பாடப் பெற்றார்.
9-ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு செல்வாக்கு பெற்ற போது, திருவண்ணாமலை ஆலயம் மாற்றம் பெறத் தொடங்கியது.
817-ம் ஆண்டு முதலாம் ஆதித்ய சோழ மன்னன் செங்கல் கருவறையை அகற்றி விட்டு கருங்கல்லால் ஆன கருவறையைக் கட்டினார்.
பிறகு ஒரு காலக்கட்டத்தில் அந்த கருவறை மகிழ மரத்தடியில் இருந்து தற்போதைய இடத்துக்கு மாறியது. 10-ம் நூற்றாண்டில் சோழர்களால், கருவறையைச் சுற்றி முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்கள் கட்டப்பட்டன.
11-ம் நூற்றாண்டில் கோபுரங்கள் எழத் தொடங்கின.
முதலாம் ராஜேந்திரச் சோழன் கொடி மர ரிஷி கோபுரத்தையும் சுற்றுச் சுவர்களையும் கட்டினான்.
1063-ம் ஆண்டு வீரராஜேந்திர சோழ மன்னனால் கிளிக்கோபுரம் கட்டப்பட்டது.
12-ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னர் உண்ணாமலை அம்மனுக்கு தனி சன்னதி கட்டினார்.
13-ம் நூற்றாண்டில் சிறு, சிறு சன்னதிகள் உருவானது. சோழ மன்னரிடம் குறுநில மன்னராக இருந்த பல்லவராஜா, கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் இந்த சன்னதிகளைக் கட்டினார்கள்.
14-ம் நூற்றாண்டில்தான் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டப்பட்டன.
1340-ம் ஆண்டு முதல் 1374-ம் ஆண்டுக்குள் இந்த மூன்று கோபுரங்களும் ஹொய்சாள மன்னர் வீரவல்லாளனால் கட்டப்பட்டது.
16-ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் .
திருவண்ணாமலை ஆலயத்தை மிகப்பெரிய ஆலயமாக மாற்றி அமைத்தார்.
சிறப்பியல்புகள்:
217 அடி உயரத்தில் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் கிழக்கு ராஜகோபுரம், சிவகங்கை தீர்த்தக்குளம், ஆயிரம் கால் மண்டபம், இந்திர விமானம், விநாயகர் தேர் திருமலைத்தேவி அம்மன் சமுத்திரம் என்ற நீர்நிலை, ஏழாம் திருநாள் மண்டபம், சன்னதியில் உள்ள 2 கதவுகள், வாயில் கால்களுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் ஆலய வாயில் கால்கள், கதவுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன் ஆராவமுதக்கிணறு வெட்டியது, அண்ணாமலையார்க்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் ‘கிருஷ்ணராயன்’ என்ற பெயரில் பதக்கம் செய்து கொடுத்தது, நாகாபரணம், பொற்சிலை, வெள்ளிக்குடங்கள் ஆகியவை கிருஷ்ண தேவராயரின் முக்கிய திருப்பணிகளில் சில.
1529-ல் தஞ்சை மன்னர் செவ்வப்ப நாயக்கர், கிழக்கு ராஜகோபுரத்தை 1590-ல் கட்டி முடித்தார்.
இதற்கிடையே குறுநில மன்னர்களும், சிவனடியார்களும் சிறு, சிறு கோபுரங்களைக் கட்டினார்கள். பே கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், வல்லாள மகாராஜ கோபுரம் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை.
இன்று 9 கோபுரங்களுடன் திருவண்ணாமலை ஆலயம் அழகுற காட்சியளிக்கிறது.
மன்னர்கள் மட்டுமல்ல... மகாராணிகள், இளவரசர்கள், இளவரசிகள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள், அரசு பிரதிநிதிகள், சித்தர்களும் இந்த ஆலயத்தின் திருப்பணிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுக்கோட்டை நகரத்தார் திருவண்ணாமலை ஆலயத்தில் மாபெரும் திருப்பணிகள் செய்தனர். 1179-ம் ஆண்டு கட்டப்பட்ட உண்ணாமுலை அம்மன் ஆலயத்தை முழுமையாக அகற்றி விட்டு புதிய சன்னதியை நாட்டுக்கோட்டை நகரத்தார்தான் கட்டி கொடுத்தனர்.
அது மட்டுமின்றி இத்திருக்கோவிலை முழுமையாக திருப்பணி செய்து 12.06-1903, 4-6-1944, 4-4-1976 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தி வைத்த புண்ணியமும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கே சாரும்.
ஈசனே மகனாக மாறிய விந்தையான கோவில்:
வல்லாள மகாராஜா மீது அண்ணாமலையாருக்கு தனிப்பட்ட முறையில் பாசம் அதிகம் இருந்தது.
அதற்கு காரணம் வல்லாள மகாராஜா வாரிசு எதுவும் இல்லாமல் தவித்ததுதான்.
திருவண்ணாமலையை ஆட்சி செய்த அந்த மன்னன் மீது இரக்கப்பட்ட அண்ணாமலையார், அவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்டார்.
அந்த மன்னனின் மகனாக மாறி அற்புதம் செய்தார்.
அது மட்டுமின்றி வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது, அவருக்கு இறுதிச்சடங்குகள் அண்ணாமலையார் சார்பில் செய்யப்பட்டன.
மேலும் ஆண்டு தோறும் வல்லாள மகாராஜாவுக்கு மாசி மாதம் அண்ணாமலையார் திதி கொடுத்து வருகிறார்.
திருவிழாக்கள்:
பரணி தீபம் மற்றும் மகா தீபம். (கார்த்திகை மாதம், முழு பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது.)
மகாதீபம் ஏற்ற 92 கிலோ செம்பு, 110 கிலோ இரும்பு சட்டங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட நெய் கொப்புரையில் 3,000 கிலோ நெய்யும், திரியாக 1,000 மீட்டர் காடா துணியும் பயன்படுகிறது.
ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும்13 கி.மீ தூரம் பக்தர்கள் கிரிவலம் செய்வதும் அதன் சிறப்பு.
அனுப்புநர்
D. சம்பத்குமார்
அம்பிகா காம்ப்ளெக்ஸ்,
866/497 திருவொற்றியூர் நெடுஞ்சாலை,
பழைய வண்ணாரப்பேட்டை,
சென்னை - 600021.