சரிந்து விழுந்தது
சீட்டு கட்டுகளைப் போல்
நொறுங்கி விழுந்தது
அடுக்குமாடி கட்டிடங்கள்.
அடி பணிந்தது அந்த
தூரத்து தேசம் மட்டுமல்ல
உலகமும் தான்.
மீனின்
பிய்க்கப்பட்ட செதில்களாய்
சிதறிக் கிடக்கின்றது
சாமானியர்களின்
வீட்டு மேற்கூரைகள்...
காலமே
நீ பொய்யல்லவே
மெய்தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றாய்.
கான்கிரீட் தொழில்நுட்பத்தையும்
துவம்சம் செய்கின்றாய்
நிச்சயமற்ற வாழ்வு என
எச்சரிக்கை செய்கின்றாய்.
கொலைக் கொலையாய் முந்திரிக்காய் என
நிலத்தை உலுக்கி
இலட்சக்கணக்கில்
உயிர்களை பறிப்பது
உமது இலட்சியமோ!
வயநாட்டில்
மரண ஓலங்கள்
முற்றிலும் அடங்கிய நிலையில்
மியான்மர், தாய்லாந்து என
அப்பாவி உயிர்களை
தப்பாமல் காவு கொண்டாய்.
அடுத்தது
எந்த நாடோ
எத்தகையக் கேடோ
யார் அறிவர்?
ஈரக்குலைகள்
நடுங்கிக் கொண்டிருக்கின்றன...
இயற்கையே,
உமது கோர முகத்தை
ஆண்டுக்கொரு முறையேனும்
காட்டி
வாட்டி வதைக்கின்றாய்.
மானுடம் நாங்கள்
செத்து மடிகின்றோம்.
அப்படி என்ன
எங்கள் மீது
உமக்கு தீராத கோபம்?...
-எறும்பூர் கை. செல்லகுமார், செய்யாறு.