பத்மநாபன் சமீபத்தில் ரிடையர் ஆன ஒரு அரசாங்க அதிகாரி.ஆன்மீக வாதி.எல்லா விஷயங்களிலும் மிகவும் கண்டிப்பானவர்.அவர் எப்படி இருக்கிறாறோ எல்லோரும் அப்படியே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர். அவர் சர்வீசில் இருக்கும்போது அவர் எடுக்கும் மீட்டிங் அட்டெண்ட் செய்பவர்கள் மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யவேண்டும்.அப்படி யாராவது ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல் போன் அடித்தால் அவர் அவமானப்படும் அளவு திட்டுவார். சினிமாவுக்கு போக மாட்டார்.சினிமா பாட்டு கேட்க மாட்டார்.
"ஜெயா இன்னிக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு பாகவதம்-தசம ஸ்கந்தம் சங்கீத உபன்யாசம் இருக்கு. நம்ம கிருஷ்ணன் கோவில்லே..நீயும் வாயேன்!" கேட்டார் மனைவியிடம் பத்மநாபன்
" இல்லே நீங்க போயிட்டு வாங்க.இன்னிக்கு என்னமோ கொஞ்சம் டயர்டா இருக்கு." சொன்னார் ஜெயா.
பத்மனாபன் ஐந்தரை மணிக்கு புறப்பட்டு விட்டார். வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பில் இருந்து நாலாவது ஸ்டாப் கிருஷ்ணன் கோவில். உடனே பஸ் வந்தது. பஸ் ஏறினார்.கூட்டம் இல்லை.எல்லா சீட்டிலும் ஒவ்வொருவர் உட்கார்ந்திருந்தார்கள்.
மூன்று பேர் உட்காரும் சீட்டில் ஒரு கல்லூரி மாணவன் உட்கார்ந்திருந்தான்.நெற்றியில் குங்குமம் வைத்திருந்தான். அவனருகில் உட்கார்ந்தார் பத்மநாபன். கையில் மொபைல் போன் வைத்துக்கொண்டு எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.
பத்மநாபன் அவன் மொபைல் போனின் ஸ்கிரீனைப்பார்த்து விட்டு சொன்னார்
" என்னப்பா நான் சொல்றேன்னு தப்பா நெனச்சிக்காதே. போனில் நயன்தாரா படமெல்லாம் ஏம்பா வெச்சிருக்கே .உன்னோட இஷ்ட தெய்வம் படம் வெச்சிக்கலாமே" என்றார்.
அவரை ஒரு மாதிரி லுக் விட்டு விட்டு ஒன்றும் பதில் சொல்லாமல் வேறு சீட்டில் போய் உட்கார்ந்துவிட்டான் அந்த பையன்.
கிருஷ்ணன் கோவில் ஸ்டாப்பில் இறங்கி கோவிலுக்குள் சென்றார் பத்மநாபன். உபன்யாசகர் வந்து விட்டார். நல்ல கூட்டம். தன் கணீர் குரலில் சமஸ்கிருத ஸ்லோகங்களை நல்ல ராகங்களில் பாடி தன் உபன்யாசத்தை ஆரம்பித்தார். பகவான் கிருஷ்ணனின் லீலைகளைப்பற்றி தெரிந்து கொள்ள பரீக்ஷித் மகாராஜன் காட்டிய ஆர்வத்தைப் பற்றியும் பூதேவித்தாயார் பசுவின் ரூபத்தில் சென்று அசுரர்களாலும் பகவானை நிந்திப்பவர்களாலும் ஏற்படும் பாரத்தை தாங்க முடியவில்லை என்று பிரம்மாவிடம் சொல்லி வேண்டியதைப் பற்றியும் மகாவிஷ்ணு தான் பூலோகத்தில் யாதவ குலத்தில் அவதரிக்கப்போவதாக அறிவித்ததைப்பற்றியும் அழகாக விவரித்துக் கொண்டிருந்தார் .
"சாரட்டு வண்டில சீரட்டொளியில
ஓரந்தெரிஞ்சது உம்முகம்." பாட்டு ஒலித்தது .பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரின் மொபைல் போனின் கால்லர் டியூன்.
"பாகவத புராணம் கேட்க வருபவர்கள் வைத்துக்கொள்ளும் கால்லர் ட்யூனா இது.ஜனங்களுக்கு விவஸ்தையே இல்லை" என்று மனதிற்குள்ளேயே புலம்பினார் பத்மநாபன்.
பத்மநாபன் தன் பக்கம் திரும்பி கேவலமாக பார்த்த பார்வையை கவனித்து விட்டார் அவர்.
போனை எடுத்தவர் " என்ன,அரை கிலோ புளி நாலு எலுமிச்சம்பழம் வாங்கிட்டு வரணும் அவ்வளவு தானே.சரி வாங்கிட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.
" ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோரமே.....அடுத்த ஐந்து நிமிடத்தில் பத்மநாபனுடைய போன் ஒலித்தது. போனை பாக்கெட்டிலிருந்து எடுத்து கால் யாரிடமிருந்து வந்திருக்கிறது என்று கூட பார்க்காமல் ரிஜெக்ட் செய்து விட்டார். அடுத்த இரண்டு நிமிடங்களில் இன்னொரு கால் பத்மநாபனுக்கு. பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் பத்மநாபனைப் புழுவைப் போல் பார்த்தார் பழிக்குப் பழி. இந்தமுறை பத்மநாபன் பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டார்.
சங்கீத உபன்யாசம் முடிந்ததும் ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு வீட்டை அடைந்தார். இவர் வீட்டு வாசலில் நான்கைந்து பெண்மணிகள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். பத்மநாபனுக்கு ஒரு மாதிரியாக பட்டது. அவர் ஆட்டோ விட்டு இறங்கியதும் பக்கத்து வீட்டு மங்களம் மாமி பத்மநாபனிடம்
"மாமா உங்க வொய்ஃப் ஜெயா சூர்யா ஹாஸ்பிடல்லே அட்மிட் ஆயிருக்காங்க. உங்க வீட்டு பால்காரன் பால் குடுக்க வந்தப்போ காலிங் பெல் அழுத்தினதும் யாரும் கதவைத் திறக்கலையாம் . மாமி ஒருவேளை பின்னால் வேலையா இருப்பாங்களோன்னு நெனச்சு பின்பக்கம் போயிருக்கான். அங்கே கிட்சன் கதவு தெறந்திருக்கு. அங்கே ஜெயா மாமி கீழே விழுந்திருந்தாராம்.அவர் கை பக்கத்திலெ மொபைல் போன் இருந்ததாம்.தலையிலே அடிபட்டு ரத்தம் வேறெ போயிருந்ததாம். மயக்கமா இருந்தாராம்..அவர் உடனே உங்களுக்கு போன்பண்ணினாராம். ஸ்விட்ச் ஆஃப்னு வந்ததாம்.உடனே அவரே ஆம்புலன்ஸ் கூப்பிட்டு சூர்யா ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டாராம். எனக்கு போன் பண்ணி சொன்னார்.
நீங்க உடனே போங்க மாமா ஆஸ்பத்திரிக்கு" ஒரே மூச்சில் அத்தனை விஷயத்தையும் சொல்லிவிட்டார் மங்களம் மாமி.
பத்மநாபன் அதே ஆட்டோவில் சூர்யா ஹாஸ்பிடலுக்கு சென்றார்.
பத்மநாபனைப்பார்த்ததும் ஓடி வந்தான் பால்காரன் சுந்தரம்.இருபது வருடமாக வீட்டுக்கு பால் சப்ளை அவன்தான். மிகவும் நல்லவன். நடந்ததை யெல்லாம் சொன்னான்.தலையிலெ அடிபட்டு நிறைய ரத்தம் போனதாலே அம்மா மயக்கமே தெளியாததாலெ ICU வார்ட்லெ இருக்காங்க.
சீஃப் டாக்டர் வெளியே வந்து சொன்னார்."இன்னும் கிரிடிகலாகதான் இருக்காங்க.ரொம்ப ரத்தம் போயிடுச்சு. ரத்தம் குடுத்திருக்கோம் .ரொம்ப லேட்டா கூட்டிட்டு வந்தீங்க. இன்னும் 24 மணிநேரம் கழிச்சுதான் எதுவும் சொல்ல முடியும் "
பத்மநாபன் தன் செயலுக்காக மிகவும் வருத்தப்பட்டார்.இரண்டு போன் கால்களை ரிஜக்ட் செய்ததற்காகவும் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்ததற்காகவும். Call log ஐ பார்த்ததில் இவர் ரிஜெக்ட் செய்த கால்கள் இவர் மனைவியிடம் வந்த கால்கள்.கீழே விழுந்ததும் மயக்கமடைவதற்கு முன் அவர் மனைவி இரண்டு முறை கால் செய்திருக்கிறார் பத்மநாபனுக்கு .
மனைவி பத்திரமாக திரும்பவேண்டும் என்று கிருஷ்ணனிடம் பிரார்த்தனை செய்து கொண்டார் பத்மனாபன்.
நீதி: காலையில் எழுந்ததும் காபி குடிக்கவில்லை என்றால் மண்டை வெடித்து விடும்,நியூஸ் பேப்பர் வரவில்லை என்றால் பைத்தியம் பிடித்து விடும், மீட்டிங் மற்றும் கோவில் சென்றால் மொபைல் போன் ஆஃப் செய்யவேண்டும்,சாப்பாட்டில் உப்பு கம்மியாக இருந்தால் கடுங்கோபம் வரும், சாப்பாட்டில் சிறு கல் வந்தால் சாப்பாட்டை விட்டே எழுந்துவிடுவேன் என்று இருப்பது இவையெல்லாமே ஒரு வகையில் தீவிரவாதமே. இப்படிப்பட்ட தீவிரவாதம் என்றாவது ஒருநாள் நம்மை துயரத்தில் ஆழ்த்திவிடும்.அதனால் எந்த ஒரு விஷயத்திலும் தீவிரவாதியாக இருக்கக்கூடாது.
----- முரளிதரன் ராமராவ், புனே