இளன் வாங்கிய புதிய பேனா கீழே விழுந்து உடைந்ததும் கதிரும், இளனும் சேர்ந்து விஜய் பேனா வாங்க கூட வரும் போதே தெரியும் இப்படித் தான் நடக்கும் என்று சொல்லி விஜயை குற்றம் சுமத்தினார்கள்.
விஜய் கொஞ்சம் வருத்தத்தோடு நீ கீழே போட்டதற்கு நான் என்னடா பண்ணமுடியும்னு கேட்டுவிட்டு வகுப்பறையை விட்டு வெளியே சென்றான்.
இளன், கதிர்,விஜய் ஒரே வகுப்பறையில் படிக்கும் நண்பர்கள் தான் ஆனால் விஜய் கூட வரும் விஷயங்களில், அவர்கள் செய்யும் தவறுகளுக்கு காரணமாய் விஜயின் அதிர்ஷ்டம் மேல் பழியைப் போட்டு விடுவார்கள்.
விஜய் நன்றாகப்படிப்பான் இளனும்,கதிரும் சுமாராக படிப்பார்கள். அவர்கள் சந்தேகங்கள், வீட்டுப்பாடங்கள் எல்லாம் விஜயிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். எல்லா இடத்திற்கும் ஒன்றாகவே சுற்றுவார்கள். ஆனாலும் சில விஷயங்களில் நடக்கும் தவறுகளுக்கு விஜய் மீதே பழி சுமத்தி ரசிப்பார்கள். அந்த மாதிரி சூழ்நிலையில் விஜய் மனம் ரொம்பவே கஷ்டப்படுவான்.
ஒரு முறை மூன்று பேரும் பூங்காவில் விளையாடும் போது விஜய் ஊஞ்சல் விளையாட கூப்பிட்டான் இளனும்,கதிரும் ஓடி வரும் போது
கதிர் தவறி கீழே விழுந்து விட்டான்.
உடனே அதற்கும் காரணம் விஜய் தான் என்று இளன் பேசத்தொடங்கினான்.
பதறித் துடித்து கதிரை தூக்கி உட்கார வைத்து தண்ணீர் குடுத்தான் விஜய்.
இப்படி அடிக்கடி இளனும், கதிரும் சொல்வதால் விஜய்க்கும் உண்மையிலேயே நாம் அதிர்ஷ்டம் இல்லாதவன் தானா என்று யோசித்து அழுவான்.
அவனுக்கு ஆசைப்பட்ட எதுவும் கிடைத்ததில்லை., சத்துணவு முட்டை கூட இவன் பெயர் வரும் போது தீர்ந்துவிடும்.
யாரோ கிழித்துப்போட்ட குப்பைக்கு இவன் தான் ஆசிரியரிடம் அடிவாங்குவான்.
இப்படி எல்லா விஷயங்களையும் யோசித்துப் பார்த்து தன்னை அதிர்ஷ்டம் இல்லாதவனாக நினைத்துக்கொண்டு
யாரிடமும் அதிகம் பேசாமல் சில நாட்களாக விலகியே இருந்தான்.
தேர்வு விடுமுறைக்குப்பிறகு பள்ளி திறந்ததும் மூவரும் ஒரு பெட்டிக்கடையில் பரிசுச்சீட்டு வாங்கினார்கள். அதில் இளனுக்கும், கதிருக்கும் ஒரு பரிசும் விழவில்லை
விஜய்க்கு முதல் பரிசு நூறு ரூபாய் விழுந்தது. கடைக்காரர் அதிர்ஷ்டகாரன் டா தம்பி நீ என்றார். பரிசு வந்த பணத்தில் இளனுக்கும், கதிருக்கும் ஐஸ்கிரீம் வாங்கித் தந்தான் விஜய்.
அதிர்ஷ்டம் என்பது எப்போது வேண்டுமானால் கிடைக்கலாம். உண்மையான நட்பு எல்லோருக்கும் கிடைக்காது. இனிமேலாவது எது நடந்தாலும் என்னை குறை சொல்லாதீர்கள் என்று விஜய் கண்கலங்கியப்படி பேசினான். இளனும்,
கதிரும் தவறை உணர்ந்து விஜயை கட்டியணைத்துக்கொண்டார்கள்.
மீ. யூசுப் ஜாகிர்❤️