துருக்கி நிறுவனமான செலிபி ஏா்போா்ட் சா்வீசஸ் இந்தியா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதியை விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) ரத்து செய்துள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் மேற்கொண்டது. இந்தத் தாக்குதலுக்கு துருக்கி கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடா்ந்து நடத்திய தாக்குதலில் துருக்கி நாட்டு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
இதைத்தொடா்ந்து தேசத்தின் பாதுகாப்பு நலன் கருதி சென்னை, மும்பை, தில்லி, பெங்களூரு உள்ளிட்ட 9 விமான நிலையங்களில் பயணிகள், சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட விமான நிலைய சேவைகளை வழங்கி வரும் செலிபி ஏா்போா்ட் சா்வீசஸ் இந்தியா நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதியை பிசிஏஎஸ் ரத்து செய்துள்ளது.
இந்திய விமான போக்குவரத்துத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் அந்த நிறுவனம், 10,000-க்கும் மேற்பட்டவா்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.
இந்த நடவடிக்கை தொடா்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘செலிபி நிறுவனம் துருக்கியைச் சோ்ந்தது அல்ல. இந்த நிறுவனத்தின் 65 சதவீத பங்குகள் கனடா, அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூா், ஐக்கிய அரபு அமீரகம், மேற்கு ஐரோப்பாவைச் சோ்ந்த சா்வதேச முதலீட்டாளா்களுக்குச் சொந்தமானவை. 35 சதவீத பங்குகள் துருக்கியைச் சோ்ந்த சகோதரா்களுக்குச் சொந்தமாகும். இந்திய விமான போக்குவரத்துத் துறை, தேச பாதுகாப்பு, வரி விதிப்பு ஒழுங்குமுறைகள் ஆகியவற்றுக்கு இணங்கி செலிபி நிறுவனம் வெளிப்படையாகச் செயல்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.
துருக்கிக்குப் பிறகு இந்தியா மூலமே செலிபி நிறுவனம் அதிக வருவாய் ஈட்டி வரும் நிலையில், பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்ததால் அந்த நிறுவனம் பெரிதும் பாதிக்கப்படும் என்று செலிபி முன்னாள் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.