ஆசிரியர்: ம . திருவள்ளுவர்
விலை : ₹200
வெளியீடு: அகநி
தொடர்புக்கு: 94443 60421
ஹைக்கூ மற்றும் நவீன கவிதைகளின் தொகுப்பாக இந்நூல்.
அதில் ரசித்த சில கவிதைகள் இங்கே உங்கள் பார்வைக்கு:
காற்றுக்காக திறந்த ஜன்னல்
வழிவிடுகிறது
கொசுவிற்கும், தூசுக்கும்.
ஓயாது அலறும் தொலைபேசி
ஊருக்குச் சொல்லும்
வீட்டில் ஆளில்லை.
முயலும் ஆமையாகிப்
பின்தங்கித் தோற்றது
முயலாமையால்.
இதைப் படித்ததும் கலைவாணர் "NSK " நினைவுவந்தது. கவிஞர் "வாலியிடம்" முயல் ஆமையிடம் தோற்றது ஏன்? என அவர் கேட்க,
முயல் ஆமையால் என வாலி தயங்க , அதையே வேகமாகச் சொல் என்றதும், முயலாமையால் எனக் கூற, கலைவாணர் தமிழ் உனக்கு சோறு போடும் ஆனா கொஞ்சம் லேட்டா போடும் என்றாராம்.
நவீன கவிதைகள்:
நானில்லாதிருந்த போது
வழியில்
எதிர்ப்பட்டவர்களை வினவினேன்
எங்கு போகிறீர்கள் என்று
களைத்துப்போய் காணப்பட்டவர்கள்
கடவுளைக் காணவென்றார்கள்
ஒரு சிலர்
எதிர்கேள்வி கேட்டார்கள்
" நீ எங்கே செல்கிறாய்" என்று
" என்னைத் தேடி..."
என்றவனை
ஏதோ மாதிரி பார்த்தபடி விரைந்தார்கள்
நிதானமாய் நடந்து
என் இடமடைந்தபோது
எல்லோரும் சொல்கிறார்கள்
நானில்லாதிருந்தபோது
என்னைத் தேடி
இறைவன் வந்திருக்கிறான் என்று
கால்களுக்கு ஒரு கணை:
போலிகளுக்கு இடம் கொடுத்து
சகல வக்கிரமும் நெஞ்சில்
உக்கிரங் கொண்டாட
கால்கள் மட்டும் ஏன்
காலங்காலமாய்
ஏதுமறியாதது போல
கோயில்களை நோக்கிப்
பயணம் புரிகின்றன
-ஸ்ரீகாந்த்
திருச்சி