இராசபாளையம், கேசா டி மிர் பள்ளி வளாகத்தில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், இராசபாளையம் கிளை நடத்திய குறிஞ்சிக்கூடல் இலக்கிய முகாம் 14.07.2024 இல் நடைபெற்றது. இம்முகாமில் எழுத்தாளர் மகாராசன் எழுதிய 'நிலத்தில் முளைத்த சொற்கள்' கவிதை நூல் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலப் பொதுச் செயலர் மருத்துவர் திரு த.அறம் அவர்கள் 'நிலத்தில் முளைத்த சொற்கள்' நூலை வெளியிட, எழுத்தாளர்கள் திரு தேவதாஸ், திரு கண்மணி ராசா, திருமதி மதுமிதா, திருமதி ஆனந்தி, திரு செல்லத்துரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மருத்துவர் த. அறம் அவர்களும், சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சா.தேவதாஸ் அவர்களும் நூல் வெளியீட்டு உரையாற்றினார்கள். அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் விருது பெற்ற எழுத்தாளர் திருமதி மதுமிதா அவர்களும், கவிஞர் கண்மணி ராசா அவர்களும் 'நிலத்தில் முளைத்த சொற்கள்' நூலினைக் குறித்து மதிப்புரை வழங்கினார்கள்.
நிலத்தில் முளைத்த சொற்கள் நூலின் ஆசிரியர் மகாராசன் ஏற்புரை வழங்கினார். ஓர் இலக்கியப் படைப்பின் அகத்தையும், அதன் அழகியலையும், அது புலப்படுத்தும் சமூக அரசியலையும் இந்நூலை முன் வைத்து நடந்த உரையாடல்களில் இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.