திரைப்படங்களில்
திரிசங்கு சொர்க்கத்தையே
படைத்துவிடும்
விஸ்வாமித்திர
இயக்குநர்களின்
வல்லமையால்
இந்திரனாகவே ஜொலிக்கும்
கதாநாயகர்களின்
பகல்கனவு அரியணையில் அமரும் ஏக்கம் தான்!
இங்கே
அரசியலை வெறுப்பவனும்
ஒப்பனைகளால்
ஒத்திகைகளின்
உந்துதலால்
அமைச்சராய் நடித்து
பெரிய திரையில்
வாகை சூடலாம்!
நிஜத்தில் அனுபவவனவாசம்
செல்லாமல் பட்டாபிஷேகம்
எங்ஙனம் சாத்தியம்?
திட்டமிட்ட
தீர்மானங்களின்
தொகுப்புகளாய்த்
திரைப்படங்கள்
திட்டமிட்டாலும்
திசைமாறும்
சதுரங்கமாய்
அரசியல் களம்!
பிரம்மாண்ட இடிகளின்
ஆரவாரத்தில்
முளைத்துவிடும்
கலைநய காளான் அல்ல அரசியல்!
விதைத்த விதை
விருட்சமாகும் வரை
காத்திருக்கும் தவம்!
-கவிஞர் த.அனந்தராமன்
துறையூர்