tamilnadu epaper

நெகடிவ்

நெகடிவ்

மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்துவிட்டார்கள். மகள் சுஜிதாவிடம் அப்பா ஆனந்தன் சொல்லிக் கொண்டிருந்தார்.

 

      "அம்மா சுஜிதா! எனக்கே ஆச்சரியமா தான் இருக்கு .போன வாரம் காலையில் நாலு மணி சுமாருக்கு சேலம் போக பஸ்சுக்காக பைபாஸ் ரோட்டில் நின்று கொண்டிருந்தேன்.அருகே டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த வாலிபர் ஒருவர்

"ஐயா! பஸ் இந்த பக்கம் வராது. காலை ஆறு மணிக்கு மேல் தான் இந்த பக்கம் வரும். நீங்க பஸ் ஸ்டாண்டுக்கு போயிடுங்க"என்று சொன்னதோடு இல்லாமல் தன்னோட பைக்கிலேயே பஸ் ஸ்டாண்டிலும் கொண்டு போய் விட்டார் .

இந்த காலத்திலும் இப்படிப்பட்ட நல்லவர்கள் இருக்கிறார்களா என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று பார்த்தால் அவரே இன்னைக்கு மாப்பிள்ளையா வந்து இருக்கார்.

நீ சம்மதம்னு ஒரு வார்த்தை சொன்னால் இந்த மாப்பிள்ளையையே பேசி முடிச்சிடலாம் " என்று ஆனந்தன் கூறியவுடன் "இந்த மாப்பிள்ளை வேண்டாம்ப்பா" என்றாள் சுஜிதா 'பட்' டென்று .

 

   "ஏம்மா வேண்டாம்னு சொல்ற? "

என்ற ஆனந்தனிடம் " அப்பா உங்களை முன்ன பின்ன யார்னே அவருக்கு தெரியாது.அப்படி இருக்கும்போது உங்களை லிப்ட் கொடுத்து பஸ் ஸ்டாண்டு வரை கூட்டி சென்று விட்டிருக்கிறார்.

இதிலிருந்தே அவர் எல்லாரையும் ஈசியா நம்பிடறார்னு புரியுது. நாளைக்கு எங்களுக்கு கல்யாணம் ஆன பின்னாடி இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்து உங்களுக்கு பதில் 

ஒரு தீவிரவாதியோ ஒரு திருடனோ அங்கே நின்று இருந்தால் என் கதி என்ன ஆகிறது?. அதனால் தான் வேண்டாம்னு சொன்னேன் அப்பா" என்றாள் சுஜிதா .

 

     எந்த விஷயமானாலும் அதில் உள்ள நெகட்டிவ் சைடை மட்டுமே பார்ப்பவள் தன்மகள் சுஜிதா என்ற உண்மையை மறந்து போன ஆனந்தன் அதிர்ச்சியில் சிலையானார். 

 

மு.மதிவாணன்

வெற்றி இல்லம்

குபேந்திரன் நகர்

அரூர் 636903