tamilnadu epaper

நேரம்

நேரம்

புதுமனை புகு விழா அழைப்பிதழ் வைக்க பக்கத்து டவுனில் இருந்து பைக்கிலேயே

வந்திருந்தனர் மாதவனும் சாந்தியும். "நாங்க நேத்தே வந்திருந்தோம். பக்கத்தில் எல்லாம் பத்திரிகை வைத்து விட்டு கடைசியா உங்க வீட்டுக்கு வந்து

பார்த்தால் வீடு பூட்டி இருந்தது.

அதான் இன்னிக்கு உனக்கு போன்

பண்ணிட்டு வந்தோம்"என்றார்கள் இருவரும்.


   " எங்களை எல்லாம் மறக்காம நீங்க தேடி வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அண்ணே!" என்ற

கனகாவிடம் "சரி நாங்க புறப்படறோம்.கட்டாயம் வீட்ல எல்லாரும் வந்துடுங்க" என்று பத்திரிகையை கொடுத்து விட்டு கிளம்பும் சமயம். எதிரில் வந்த அந்த கிழவியைப் பார்த்த கனகா "அண்ணே! ஒரு ரெண்டு நிமிஷம்.உட்கார்ந்து தண்ணி குடிச்சிட்டு போங்க" என்றதும்

ஆச்சர்யமாகப் பார்த்தனர் இருவரும். "அந்த திண்ணை வீட்டு கிழவியைப் பார்த்துட்டுப் போனா எந்த காரியமும் நடக்காது. நேத்து அவளைப் பார்த்துட்டு வேலைக்குப் போன என் பையனுக்கு திடீர்னு

உடம்பு சரியில்லாம போயிடிச்சு

இந்த மாதிரி பல பேருக்கு பல விதமா நடந்திருக்கு" என்றாள் கனகா.


    "இன்னும் கூடவா இதையெல்லாம் நம்பறீங்க?"

என்ற மாதவனை 

 "கிராமத்திலேயே பிறந்து வளர்ந்த நீங்க இப்படி பேசறதுதான் ஆச்சர்யமா

இருக்கு" என்று வியப்பு மேலிட

கேட்டாள் கனகா.


    இருவரும் புறப்பட்டுப் போனதும்

அறைக்குள் நுழைந்து சமையல் வேலையில்

ஆழ்ந்துபோன கமலாவை செல்போன் வீறிட்டு அழைத்தது.

"அக்கா! நான் தீபக் பேசறேன்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி

பத்திரிகை வைச்சுட்டு போனாங்களே அவங்க ரெண்டு

பேரும் ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாங்க சீக்கிரம் வாங்கக்கா" என்று பதட்டத்துடன்

வந்த தகவல் அவளை நிலை குலையச் செய்தது.

ஓடோடிச் சென்று பார்த்த அவளுக்கு மயக்கமே வந்து விட்டது. சற்று முன் 

சிரிக்கச் சிரிக்க பேசியவர்கள் இப்போது வெறும் சதைப் பிண்டகளாய் ...அவர்கள் வீட்டுக்குச் சிறிது முன்பாகவே நடந்திருந்தது அந்த விபத்து. மயக்கம் தெளிந்து கண் விழித்த கனகாவின் அருகில் யாரோ பேசிக் கொண்டது காதில் விழுந்தது. "சும்மா கொஞ்ச தூரம்தான். ஒரு ரெண்டு நிமிஷம் முன்னாடி புறப்பட்டு இருந்தாங்கன்னா வீட்டுக்கு வந்து இருப்பாங்க. இதுதான் நேரங்கறது." 



-மு.மதிவாணன்

குபேந்திரன் நகர்

அரூர் 636903

9159423090

9080680858