2025 மார்ச் 22 அனுசரிக்கப்படும் உலக தண்ணீர் தினத்தை ஐநா அவை பனிப்பாறைகளை பாதுகாப்பதற்கான சர்வதேச ஆண்டாக அறிவித்துள்ளது. உலகின் 70 சதவீதம் வரையிலான நல்ல தண்ணீர் பனிப் பாறைகளாக உள்ளன. ஆர்டிக் கடற்கரைப் பகுதியில் உள்ள ஒரு லட்சம் சதுர கிலோமீட்டர்க்கும் அதிகமான பனிப்பாறைகள் மற்றும் பூமியின் வட துருவத்தில் உள்ள பனிப் பாறைகளை பாதுகாப்பதற்கான உறுதியை ஐ.நா அவை ஏற்றுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுகாதாரமான நீரை உறுதி செய்யும் நிலையான வளர்ச்சி இலக்கு ஐநா அவையால் கடந்த காலங்களில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் காரணமாக பூமி மிக அதிகளவு வெப்பமடைவதால் பனிப்பாறைகள் முன்னெப்போதையும் விட வேகமாக உருகி வரு கின்றன. இதனால் பனிப்பாறைகள் வேகமாக உரு குவதுடன் பூமியின் நீர் சுழற்சி முறையை கணிக்க முடியாததாகவும் தீவிரமானதாகவும் ஆக்குகிறது. இதனால் வெள்ளம், வறட்சி, நிலச்சரிவு மற்றும் கடல் மட்ட உயர்வு, சுற்றுச்சூழல் அமை ப்பின் சிதைவு என மிக மோசமான இயற்கைப் பேரழிவு உருவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலகில் உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சி சிதைவடையாமல் இருக்க சுற்றுச்சூழல் அமைப்பு சிதையாமல் பாதுகாக்க வேண்டும். இதற்காக பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்கும், மக்களுக்கும் பூமிக்கும் ஏற்பட உள்ள பேரழிவை தடுப்பதற்காகவும் பனிப்பாறைகள் உருகி வருவதை கட்டுப்படுத்தவும் நாம் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என ஐநா அவை தெரிவித்துள்ளது. ஒரு புறம் பனிப்பாறைகள் உருகிவரும் அதே நேரத்தில் மற்றொரு புறம் போதிய அளவு சுத்தமான தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறையும் நிலவுகின்றது. இந்தியாவில் நிதி ஆயோக் அறிக்கையின்படி ஏறக்குறைய 60 கோடி இந்தியர்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றனர். ஆண்டுதோறும் சுமார் 2,00,000 பேர் பாதுகாப்பான தண்ணீர் கிடைக்காததால் உயிரிழக்கின்றனர். தில்லி, பெங்களூரு, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் மக்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை அனுபவித்து வருகின்றனர். இது எதிர்காலத்தில் இன்னும் மோசமடையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.