செகண்ட் ஷோ முடிந்து மக்கள் கூட்டம் தியேட்டரை விட்டு வெளியேறத் துவங்கியது. அக்கூட்டத்தில் ஒருவராய் வெளியே வந்தார் பரமசிவம்.
" ப்ச்... மூணு கிலோ மீட்டர் நடக்கணும்"சன்னமாய்ப் புலம்பியபடி நடக்க ஆரம்பித்தார்.
ஒரு கிலோமீட்டர் தூரம் கடந்ததும் மக்கள் கூட்டம் குறையத் தொடங்கி, சிறிது நேரத்தில் தான் மட்டுமே இந்த குறுக்கு பாதையில் தனியே நடந்து செல்வதை உணர்ந்த பரமசிவம் நெஞ்சில் பய ரேகை படியத் தொடங்கியது.
தூரத்தில் நாய் ஊளையிடும் சத்தம். இன்னும் வேறு ஏதேதோ சத்தங்களும் தொடர்ந்து வந்தன.
நடையை வேகமாக்கினார்.
"சேச்சே இனிமே தனியா செகண்ட் ஷோவுக்கு வரவே கூடாதுப்பா...இந்த கும்மிருட்டும்.. சத்தமும் இருதயமே நின்னு போயிடும் போலிருக்கு"
தூரத்தில் இரண்டு வெளிச்சம் புள்ளிகள். அதைக் கண்டதும் பரமசிவம் உடம்பில் வியர்வை ஆறு. நடையின் வேகத்தைக் குறைத்தார்.
வெளிச்ச புள்ளிகளை நெருங்க. நெருங்க நாக்கு வறண்டு போனது.
கடைசியில் அவையிரண்டும் ஒரு குடிசையின் முன் கட்டப்பட்டிருந்த மாட்டின் இரண்டு கண்கள்தான் என்பதைத் தெரிந்து கொண்ட பரமசிவம் வேக வேகமாக நடந்து வீட்டை அடைந்தார்.
கதவைத் திறந்த மனைவியிடம் எதுவும் பேசாமல் படுக்கையில் போய் விழுந்தவர் பத்து வினாடிகளுக்குள் கும்பகர்ணனாக மாறினார்.
காலை ஐந்து மணி.
"ஏங்க எந்திரிங்க.. மணி அஞ்சு! உங்க சிஷ்யப் பிள்ளைகளெல்லாம் வந்து காத்திட்டிருக்காங்க" மனைவி உசுப்ப,
வாரிச்சுருட்டி எழுந்து அவசர அவசரமாகக் கிளம்பி வீட்டின் பின்புற மைதானத்திற்கு வந்து சேர்ந்து தன் சிஷ்ய பிள்ளைகளின் வணக்கத்தைப் பெற்றுக் கொண்டு, குத்துச்சண்டை முறைகளை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார் பயில்வான் பரமசிவம்.
(முற்றும்)
முகில் தினகரன், கோவை.