tamilnadu epaper

பலே விஞ்ஞானி

பலே விஞ்ஞானி

எப்போதும் கம்ப்யூட்டர், இன்டர்நெட், ஸாஃப்ட்வேர், என்று குடைந்து கொண்டு, தன்னை ஒரு விஞ்ஞானி எனப் பறைசாற்றிக் கொண்டு திரியும் என் நண்பர் திவாகர், தனது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பை பற்றி சொல்லச் சொல்ல எனக்கு சிரிப்பாய் வந்தது.

 

 "எப்படிடா?... என்னோட செல் நம்பரையும்... பிறந்த தேதியையும் சொன்னால் நான் எப்பச் சாவேன்?னு உன்னால கண்டுபிடிச்சுச் சொல்ல முடியுமா?.. ம்ஹும்... நான் நம்ப மாட்டேன்".

 

அவன் அதில் உறுதியாய் நிற்க என் ஆபீஸ் செல் நம்பரையும், என் பிறந்த தேதியையும் சொல்லி வைத்தேன். 

 

கம்ப்யூட்டரில் அதை ஃபீட் செய்து எனக்கு புரியாத பல வேலைகளைச் செய்து விட்டு இறுதியில், "இன்னும் மூன்று நாட்களுக்குள் உனக்கு மரணம்" என்றான். 

 

 "அப்படியா?... நான்காம் நாள் உயிரோடு வந்து உன் முன்னாடி நின்னு உன்னோட ஆராய்ச்சி டுபாக்கூர்னு நிரூபிக்கிறேன்!" வீரப்பாய் சொல்லிவிட்டு வெளியேறினேன். 

 

இரண்டு நாள் கழித்து எனக்குள் இனம் புரியாத ஒரு பய உணர்ச்சி தோன்ற, என் ஆபீஸ் செல் நம்பரை சக ஊழியனுக்குத் தந்து விட்டு, அவன் நெம்பரை நான் வாங்கி வைத்துக் கொண்டு, 'இனி என்ன ஆகும் பார்த்துடலாம்?". 

 

மாலை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பி வந்ததும், அந்த சக ஊழியன் நெம்பரிலிருந்து என் மனைவியின் மொபைலுக்கு கால், 

 

"இந்த எண் யாரோடது?" தெரியாத குரல்.

 

"என் ஹஸ்பெண்ட் நெம்பர்"

 

"அவர் ஆக்ஸிடெண்டில் இறந்திட்டார்"

 

சட்டென்று போனைக் கட் செய்து விட்டு, என்னிடம் வந்து பீதியோடு அவள் சொல்ல,

 

நான் "அடேய். திவாகரா?.. நீ ஜீனியஸ்டா" என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

 

(முற்றும்)

 

--------------

முகில் தினகரன், கோவை