தேயத் தேய தேய்ந்து போன பழையச் செருப்பு நான்.!
*தேயம்* என்பது என்ன?
என்று தெரிந்து கொண்ட செருப்பு நான்!
சாயம் வெளுத்து போன போதும் உன்னை சுமந்து செல்கிறேன்.!
ஓய்வில்லாது ஓடும் போதும் உறவுகொண்டு வாழ்கிறேன்!
இரண்டு கால்கள் இரண்டு ஜொதைகள் இணைபிரிய வில்லையே!
மதிய வெயில் வெட்பம் ஏற்று மனதில் சோர்வு இல்லையே.!
காது அறுந்து போனபோதும் தைத்து நீயும் போடுவாய்!
காலில் முட்கள் குத்தாமலே அடியை நானோ தாங்குவேன்!
ஏதும் இல்லை என்ற போதும் என்னை பார்த்து கொள்கிறாய்!
போது சாயும் வரையில் நானும் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்!
அன்றொருநாள் பெரிய கடையில் புதிய செருப்பு வாங்கினாய்..
அன்றுவரை தாங்கி வந்தேன் சாலையோரம் வீசினாய்.!
குப்பைக் கூளம் நடுவினிலே இங்கு அனாதைபோல் கிடக்கிறேன்!
குட்பை எனக்கு சொல்லிவிட்டு புதிய செருப்பில் நடக்கிறாய்!
பழைய காலம் பழைய பாசம் பழைய தந்தை தாயை மறக்கிறாய்!
பழைய செருப்பு தாங்கி நடந்த பழைய நினைவை அழிக்கிறாய்!
வீட்டு வாசல் இருந்த என்னை வீதியோரம் வீசினாய்.!
போட்டு மிதித்தும் சுமந்த என்னை புழுவைப் போல நினைக்கிறாய்!
நாட்டு நடப்பு நமது விதியே என்று எண்ணிக் கொள்கிறேன்!
நாளும் உழைத்து தேய்ந்து போனேன்! நானும் புதைந்து போகிறேன்!
-வே.கல்யாண்குமார்.