tamilnadu epaper

பிச்சுமணி

பிச்சுமணி


பிச்சுமணி நகருக்கு வெளியே அமைந்துள்ள அந்த வீட்டுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகத்தான்

கிரஹப்பிரவேசம் செய்துகொண்டு மகன் ,மற்றும் மருமகளுடன் குடி பெயர்ந்தார் .

மாநகரின் விரிவாக்க பகுதியில் அமைந்து இருந்தது வீடு.

மகன் கிருஷ்ஷும் ,மருமகள் புவனாவும், காரில் நகருக்கு வேலைக்கு சென்று வருகிறார்கள். தினமும் இரவு ஏழு மணிக்கு மேல்தான் வீட்டிற்கு திரும்புவார்கள் . வரும்போதே வீட்டுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் இதர பொருள்களை வாங்கி வந்து விடுவார்கள் .

பிச்சுமணியும் அரசாங்க வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர். மனைவி சில வருடங்களுக்கு முன் திடீரென்று ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார் .

மருமகள் புவனா காலையில் அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்பாகவே சமையல் செய்து, மாமனார் சாப்பிட ஏதுவாக சாப்பாட்டு மேசையில் மேடையில் எடுத்து வைத்து விட்டு சென்று விடுவார்.,

பிச்சுமணிக்கு புதிய வீட்டுக்கு குடிவந்த ஆரம்ப காலங்களில் பொழுதைப் போக்குவது மிகவும் சிரமமாக இருந்தது. பிறகு வீட்டை சுற்றி பூச்செடிகள் வைத்து வளர்க்க ஆரம்பித்தார் .

அவர்கள் குடி வந்த இரண்டு மாதத்தில் இவர்கள் வீட்டை ஓட்டி காலியாக இருந்த ஒரு வீட்டிற்கு நான்கு வாலிபர்கள் வந்து குடியேறினார்கள்.

பெரும்பாலும் அவர்கள் பகல் நேரங்களில் வீட்டில் இருப்பது இல்லை. ஆனால் இரவு நேரங்களில் விடிய,விடிய அவர்கள் வீட்டில் விளக்கு எரிந்துகொண்டிருக்கும் .

அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல என்பது அவர்களை பார்க்கும் போதே தெரிந்தது.

அவர்களில் இருவர் வட இந்தியர்கள் போலவும், இருவர் கேரள முஸ்லிம்கள் போலவும் தெரிந்தார்கள் .

எப்போதாவது பிச்சுமணியை வெளியில் சந்திக்கும் போது அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு செல்வார்கள்.

பிச்சுமணி அவர்களது வேலையை குறித்து விசாரித்தபோது, அவர்கள் அனைவரும் ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும் கூறினார்கள்.

இருந்தபோதிலும் பிச்சுமணிக்கு அவர்கள் மீது ஒருவித சந்தேகம் இருந்து வந்தது.

அதை மேலும் உறுதி செய்யும் விதமாக முதல் நாள் இரவு பிச்சுமணி மாடியிலிருந்த தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது,

பக்கத்து வீட்டின் மாடி அறையில் ஏதோ சத்தம் கேட்டது,

தூக்கத்தின் இடையில் விழித்து எழுந்த பிச்சுமணி, தனது அறையின் ஜன்னலை லேசாக திறந்து பார்த்தபோது பக்கத்து வீட்டின் மாடியில் அந்த நான்கு நபர்களும் தங்களுக்குள் குசுகுசுவென ஏதோ பேசிக்கொண்டார்கள். அது பிச்சுமணியின் காதில் அரைகுறையாக விழுந்தது

அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டபோது , நால்வரும் தனித்தனியாக தங்களுக்கென ஒரு இடத்தை பிரித்துக் கொண்டார்கள் அதாவது ஒருவர் சென்ட்ரல் ஸ்டேஷன், மற்றொருவர் பெசன்ட் நகர் சர்ச் , மூன்றாமவர் பிரபல தியேட்டர் பெயர் ஒன்றிணையும் இன்னொருவர் பிரபல ஷாப்பிங் மால் ஒன்றினையும் கூறினார்.

மற்றொருவன். அவர்களிடம்,

அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு. சென்று

வேலையை குறிப்பிட்ட நாளில் கரெக்டாக முடித்துவிட வேண்டும் என்று ஆணையிட்டான்.

மூன்று மாதங்களாக இதற்காக செய்த முன்னேற்பாடுகளை மீண்டும் ஒருமுறை சரி பார்த்துக்கொள்ள வேண்டுமென்றும்,இதில் எந்தவித தவறும் நடந்துவிடக்கூடாது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினான் .

மீண்டும் புதன்கிழமை அன்று இறுதி முடிவு எடுக்கலாம் என்றும் கூறினான் .

இதையெல்லாம் தன் வீட்டில் ஜன்னலருகே நின்று கேட்டுக் கொண்டிருந்த பிச்சுமணிக்கு இவர்கள் அனைவரும் ஏதும் வேலையில் இல்லை என்பதும், ஏதோ கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும், சந்தேகம் ஏற்பட்டது.

மறுநாள் காவல்துறையில் பணிபுரியும் தனது நண்பர் ராஜேந்திரனுக்கு போன் செய்து ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறினார்,

அதற்கு ராஜேந்திரன் முக்கியமான விஷயமாக இருந்தால் போனில் பேச வேண்டாம், ஒரு குறிப்பிட்ட ஹோட்டலின் பெயரை கூறி அந்த இடத்திற்கு உடனே புறப்பட்டு வருமாறும் கூறினார்.

அதன்படி பிச்சுமணியும் உடனே ராஜேந்திரன் கூறிய ஹோட்டலுக்கு சென்று அமர்ந்து இருந்தார் .அப்போது அங்கு வந்த காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் அவரிடம் என்ன விஷயம் என்று கேட்டார்?

பிச்சுமணியும் நடந்தவைகளை எல்லாம் ராஜேந்தரனிடம் எடுத்து கூறினார்.

அதற்கு ராஜேந்திரன் நீங்கள் கூறுவதை எல்லாம் கேட்டால் அவர்கள் சந்தேகத்திற்குரிய நபர்களாகவே தெரிகிறார்கள், எனினும், நான் ரகசியமாக எங்களது ஆட்களை அனுப்பி விசாரணை செய்து அவர்களை கூண்டோடு பிடிக்க நடவடிக்கை எடுக்கிறேன்,அதுவரை நீங்கள் யாரிடமும் இந்த விஷயத்தைப் பற்றி பேச வேண்டாம் என்று கூறினார் .

ராஜேந்திரனிடம் சரி என்று கூறிவிட்டு வந்த பிச்சுமணி இந்த விஷயத்தை மகனிடம் கூட தெரிவிக்காமல் ரகசியம் காத்தார் .

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை . காலை 10.00 மணியளவில் ஓர் ஆணும், பெண்ணும் வந்தனர் .

அவர்கள் ,”உள்ளாட்சி தேர்தல் “ நடைபெற உள்ளதால் , வாக்காளர் பட்டியல் சரி பார்க்க வந்துள்ளதாக தெரிவித்தனர் .

அப்போது ,பிச்சுமணி அவர்களிடம் தங்களது ஓட்டு ,முன்பு வசித்த வீட்டு முகவரியில் உள்ளதாகவும் ,இன்னமும் தற்போதைய முகவரிக்கு மாற்றம் செய்யவில்லை என கூறினார் .

“பரவாயில்லை இந்த படிவத்தை நிரப்பி கையொப்பம் இட்டு கொடுங்கள் ,நாங்களே மாற்றம் செய்து விடுவோம்” என கூறினார்கள் அவர்கள்.

பிச்சுமணி படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்தார். விரைவில் மாற்றம் செய்துவிடுவதாக கூறி அவர்கள் விடைபெற்று சென்றனர் .

பின்னர் ,அவர்கள் பக்கத்து வீடுகளுக்கும் செல்வதை பிச்சுமணி பார்த்தார் .

இளைஞர்கள் அன்று பேசிய வெள்ளிக்கிழமையும்

வந்துவிட்டது.

ஆனால் பக்கத்து வீட்டு இளைஞர்கள் எப்போதும் போல இருந்தார்கள் .

ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை .

தாம்தான் ஏதும் தவறாக புரிந்துகொண்டோமோ என,குழம்பி போனார் பிச்சுமணி .

அவர் ,ராஜேந்திரனுக்கு போன் செய்தபோது , தாம் கொஞ்சம் பிஸியாக இருப்பதாகவும் , மாலையில் பேசுவதாகவும் தெரிவித்து போனை துண்டித்தார் .

மாலையில் ,பிச்சுமணி வீட்டின் முன்பக்க ஹாலில் அமர்ந்து நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தபோது ,தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பின் இடையில் பிரேக்கிங் நியூஸ் ஒன்று scroll ஆக ஓடியது .,அதில் , “சென்னையில் , சென்ட்ரல் ரயில் நிலையம் ,பெசன்ட் நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்த்த சதி திட்டம் தீட்டிய தீவீரவாதிகள் நான்கு பேர் கைது .அவர்களது சதி திட்டம் முறியடிக்கப்பட்டது “என பரபரப்பு செய்தியை ஒளிபரப்பியதுடன் பிடிபட்டவர்களையும் காண்பித்தார்கள் .

அப்பாவுடன் அமர்ந்து T.V.யில் அதை பார்த்துக்கொண்டிருந்த கிருஷ் ,அவர்களை பார்த்தவுடன் ,அதிர்ச்சியுடன் “அப்பா ,இவங்க பக்கத்து வீட்டுல குடி இருக்கற பசங்கப்பா என்றான் .

எனக்கு முன்பே தெரியும் என்றார் , பிச்சுமணி ,

என்னது ,”உங்களுக்கு முன்னாடியே

தெரியுமா ? என ஆச்சர்யத்துடன் கேட்டான் கிருஷ்.

பிச்சுமணி இதுவரை நடந்தவைகளை மகனிடம் கூறினார் .

அடுத்த சில நிமிடங்களில் இளைஞர்கள் குடியிருந்த வீட்டுக்கு முன்பாக போலீசார் குவிக்கப்பட்டனர் . போலீஸ் வேனிலிருந்து அந்த நான்கு இளைஞர்களும் இறக்கப்பட்டு வீட்டினுள் அழைத்து செல்லப்பட்டனர் .

வீடு முழுவதும் சோதனை செய்யப்பட்டது .

அப்போது அங்கு காவல் துறை அதிகாரிகள் ,மத்திய உளவுத்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ,தொலைக்காட்சி ஊடகங்கள் என அனைவரும் வந்து சேர்ந்தனர் .

அங்கு வந்த ராஜேந்திரன் ,

அவரது உயர் அதிகாரியிடம் தன்னுடைய வீட்டின்முன்பு நின்று கொண்டிருந்த பிச்சுமணியை அழைத்து அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர்,.அங்கு கூடியிருந்த ,பத்திரிகையாளர்கள் ,தொலைக்காட்சி நிருபர்களிடமும், பிச்சுமணியை

அறிமுகம் செய்தார் .

“ இந்த தீவிரவாதிகளை பிடிப்பதற்கும் , குண்டுவெடிப்பு நிகழாமல் தடுத்து நிறுத்தவும் இவர் கொடுத்த தகவல்களே முக்கிய காரணம் என்றார் . இவர் அளித்து தகவலின் அடிப்படையில் நாங்கள் திட்டம் தீட்டி , கூண்டோடு பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டோம், அதன்படி இவர்கள் திட்டமிட்டபடி

சென்ட்ரல் ரயில் நிலையம் , பெசன்ட் நகர் சர்ச் மற்றும் சில இடங்களில் குண்டு வைப்பதற்கு முயற்சி செய்தபோது, பொறி வைத்து இவர்களை கைது செய்தோம் என்றார் . இதன்மூலம் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிர்பலி ஆவது தடுக்கப்பட்டுள்ளதுஎன்றார்.

உடனே,அனைத்து ஊடகங்களும்

பிச்சுமணியை படம் பிடித்து தத்தமது சேனல்களுக்கு லைவ் ஆக அனுப்பிக் கொண்டிருந்தனர் .

பிச்சுமணியோ மீடியாக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிக்கொண்டிருந்தார் .,

அவரது மகன் கிருஷ் தனது மனைவி புவணாவுடன் அப்பாவை பெருமையுடன் பார்த்து கொண்டிருந்தான் .

ராஜேந்திரன் -ஐ தனியாக வீட்டினுள் அழைத்து சென்ற பிச்சுமணி, அவரிடம் ,அவர்கள் தீவிரவாதிகள் என்பதை எப்படி உறுதி செய்தீர்கள் ?என கேட்டார் .

“அன்று உங்க வீட்டுக்கு வாக்காளர் பட்டியல் சரி பார்க்க வந்தவர்கள், காவல்துறையின் உளவு பிரிவு அதிகாரிகள் ,அவர்கள்

பக்கத்து வீட்டில் விசாரணை செய்யும்போது ,ரகசியமாக மைக்ரோ போன் ஒன்றை பொறுத்திவிட்டு வந்தனர் ,

அதன்மூலம் இவர்களின் திட்டம், மற்றும் நடமாட்டத்தை கண்காணித்த காவல்துறை , சரியான நேரத்தில் அவர்களை கைது செய்தது என கூறினார்.

காவல் துறை அதி விரைவாக செயல்பட்டதன் காரணமாக நிகழவிருந்த பெரிய ஆபத்திலிருந்து பொதுமக்களை காப்பாற்ற முடிந்தது.



-கோபாலன் நாகநாதன்,

சென்னை 33.