tamilnadu epaper

பிப்ரவரி 14 காதலர் தினம்

பிப்ரவரி 14 காதலர் தினம்

 

 

நமக்கு தெரிந்ததெல்லாம், பிப்., 14 - காதலர் தினம் என்பது மட்டுமே. ஆனால், மேலைநாடுகளில், காதலர் தினம், பிப் 7ம் தேதி முதலே, களைகட்டத் துவங்கி விடும். காதலர் தினத்தை, அவர்கள், ஏழு நாட்கள் கொண்டாடுவர்.

 

ரோஜா தினம்:

 

காதல் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, ரோஜா மலர் தான். அதனால் தான், காதலர் தினமானது, பிப் 7 அன்று, ரோஜா தினத்துடன் - 'ரோஸ் டே' துவங்குகிறது.

 

அணுகும் தினம்:

 

ஒருவரைக் காதலித்தால் மட்டும் போதுமா? அடுத்த கட்டமான திருமணத்தை பற்றி பேசுவதற்காகவே, பிப்., 8ம் தேதி, அணுகும் தினம் - 'புரபோஸல் டே' கடைப்பிடிக்கப்படுகிறது.

 

சாக்லேட் தினம்:

 

அணுகும் தினத்தில், 'க்ரீன் சிக்னல்' கிடைத்தால், அதை இன்னும் சுவையாக்குகிறது அடுத்த நாளான, பிப்., 9. காதலன் தன்னுடைய காதலிக்கு, சாக்லேட் வாங்கிக் கொடுக்கும் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

 

கரடி பொம்மை தினம்:

 

பார்ப்பதற்கு அழகாக, புஸுபுஸுவென இருக்கும், கரடி பொம்மையை தங்கள் காதலனுக்கோ, காதலிக்கோ, பிப் 10ம் தேதி பரிசளிப்பது தான், 'டெடி டே!' மென்மையாகவும், அழகாகவும் பொம்மை இருப்பது போலவே உறவும் இருக்க வேண்டுமென்பதை உணர்த்தும் தினம் இது.

 

வாக்குறுதி தினம்:

 

பிப் 11ம் தேதி, 'பிராமிஸ் டே' மிகவும் முக்கியமானது. 'உன்னை எந்தச் சூழ்நிலையிலும் நான் கைவிட மாட்டேன். இறுதிவரை நாம் இணைந்து வாழ்வோம்...' என, காதலர்கள் உறுதிமொழி ஏற்கும் நாள்.

 

அரவணைக்கும் தினம்:

 

தாங்கள் விரும்பும் நபர் மீது எவ்வளவு அன்பும், அக்கறையும் தமக்கு இருக்கிறது என்பதை எடுத்துரைப்பதே, 'ஹக் டே!' பிப் 12ம் தேதி, காதலர்கள் தோள் மீது தோள் சாய்ந்து, ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொள்வர்.

 

முத்த தினம்:

 

காதலர் தினத்துக்கு முதல் நாளான, பிப்., 13 அன்று, காதலர்கள் தங்களுக்குள் முத்த மழைப் பொழிந்து அன்பை வெளிப்படுத்திக் கொள்வர்.

 

காதலர் தினம்:

 

மேலே சொன்ன ஏழு தினங்களுக்கு சிகரமாக விளங்குவது, பிப்., 14 அன்று அனுசரிக்கப்படும், 'வேலன்டைன்ஸ் டே!' காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக, 'சர்ப்ரைஸ் கிப்ட்' கொடுத்து அசத்துவர்.

 

பிரான்ஸ் நாட்டில், இதய உருவத்தை பெரிதாக காகிதத்தில் செய்து, அதன் மீது லேஸ் ஒட்டி, வாழ்த்து அட்டைகளாகத் தயார் செய்து விற்பனை செய்தனர். அதிலிருந்து, காதலுக்கு இதய உருவம் அடையாளமானது.

 

தொகுப்பு: பா. சீனிவாசன், வந்தவாசி.