tamilnadu epaper

பிரியாணி விருந்து

பிரியாணி விருந்து


அன்று அலுவலக நண்பர்

ஒருவரின் இல்லத் திருமணம். ஞாயிறுக்கிழமை

என்பதால் ஆபீசில் பணியாற்றும் அனைவரும்

ஆஜராகி இருந்தோம்.


விருந்தில் அசைவம்

பறிமாறப்படும் என்று

அரசல் புரசலாக செய்தி

என் காதில் விழுந்திருந்ததால் அசைவப் பிரியனான எனக்குஎன்ன 

மெனு என்பதை தெரிந்து

கொள்ளும் ஆர்வம் தலை

தூக்கியது. 


ஆவலை அடக்க முடியாத நான் மெனுவைப் பற்றி துப்பறிவதற்காக பல பிரயத்தனங்களை செய்தேன். ஒன்றும் பலனளிக்கவில்லை.


ஒரு வழியாக யோசித்து

நேரடியாக சமையல் பகுதிக்கு சென்று தகவல்

திரட்ட தீர்மானித்தேன்.

மெதுவாக சமையல் நடக்கும்

இடத்துக்கு சென்றேன்.


சளி பிடித்து இருந்ததால்

வாசனையை அறிய முடியவில்லை. ஆங்காங்கே

கேட்டரிங் யூனிபார்ம் அணிந்த பணியாளர்கள்

நடமாடிக் கொண்டு இருந்தார்கள்.


மிகப்பெரிய அண்டாக்கள்

பிரம்மாண்டமான தாம்பாளங்களால் மூடப்பட்டு

அவற்றின் மேல் அடுப்பு கரி நெருப்பு பரப்பப்பட்டிருந்தது.


" இது உள்ள என்ன இருக்கு ? " என்று ஒருவரிடம் அப்பாவித் தனமாக கேட்டேன். ஏதோ வேற்றுகிரகவாசியை பார்ப்பது போல் என்னைப் பார்த்தவர், " எல்லாம் மட்டன் பிரியாணிங்க ! " என்று சொல்லி விட்டுச் சென்றார்.


சற்று மனம் தளராத விக்ரமாதித்தன் வேதாளத்தின் கேள்விக்கு சரியான பதிலை கண்டுபிடித்து விட்டது போல பெருமையுடன் வந்தேன்.


திருமணம் முடிந்ததும் பந்தி பரிமாறப்பட்டது. சிறிய தட்டுகளில் பிரியாணியை வைத்து அவற்றையெல்லாம் ஒரு பெரிய தாம்பாளத்தின் மேல்  அடுக்கி வைத்து ஒவ்வொரு இலையிலும் அதை பரிமாறிக் கொண்டு சென்றனர்.


என் பிரியாணியை அவசர அவசரமாக கிளறினேன் என்ன சோதனை ! ஒரு துண்டு கறி கூட இல்லை. 

வெறும் எம்டி பிரியாணி மட்டுமே இருந்தது.


காலையில் வீட்டில் நாளிதழை பார்த்தேன். ஒருவரி ராசி பலனில் எனது ராசிக்கு  "ஏமாற்றம் "என்று போட்டிருந்தது. ராசிபலன் அதன் வேலையை காட்டிவிட்டது என்று நினைத்துக் கொண்டேன்.


அப்போதுதான் என் அலுவலக நண்பர் விருந்தை மேற்பார்வையிட்டு வந்து கொண்டிருந்தார். அவர் மிகவும் நெருங்கிய நண்பர் என்பதால் பீசே விழவில்லை என்று பிரியாணியை காண்பித்தேன்.


விறுவிறு என்று சென்றவர் ஒரு தட்டில் கொஞ்சம் பிரியாணியை கொண்டுவந்து என் இலை மீது கவிழ்த்தார். 


கிளறிப் பார்த்தேன். கிளறக்

கிளற  நிறைய கறித் துண்டுகள் வெளிவந்தன.

திருப்தியாக சாப்பிட்டு விட்டு வெற்றிலை பாக்கை சுவைத்தபடி வெளியே போட்டிருந்த சோபாவில் அமர்ந்தேன். அங்கு நிறைய நாளிதழ்கள் கிடந்தன. 

ஒரு பேப்பரை எடுத்து புரட்டினேன். அதில் எனது ராசிக்கு " நண்பரால் உதவி "

வென்று போட்டிருந்தது.


மொத்தத்தில் இரண்டு பேப்பர்களில் போட்டிருந்த வெவ்வேறு பலன்களும் பலித்து விட்டன.



-வெ.ஆசைத்தம்பி

தஞ்சாவூர