தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரிக்கும் பாஜக மாநில தலைவர் மாற்றம் குறித்த பேச்சு அடிபட ஆரம்பித்திருப்பதால் பலரும் டெல்லிக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். புதுச்சேரி மாநில பாஜக தலைவராக சாமிநாதன் தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். இவர் தலைவராக இருந்த போதுதான் 2021-ல் பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் 6 இடங்களில் வென்ற பாஜக, முதல் முறையாக அமைச்சரவையிலும் இடம்பிடித்தது.
இந்த நிலையில், 2023-ல் புதுச்சேரி மாநில பாஜக தலைவராக மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதியை நியமித்தது பாஜக தலைமை. இவரது தலைமையில் 2024 மக்களவைத் தேர்தலை சந்தித்த பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி காங்கிரஸிடம் தோற்றுப் போனது. ஆளும் கூட்டணியில் இருந்தும் தொகுதியை தவறவிட்டது பாஜக-வுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் கட்சியின் வளர்ச்சியும் மந்த நிலைக்குப் போனது.
மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து, அமைச்சர், வாரியத் தலைவர் பதவிகளை எதிர்பார்த்து கிடைக்காமல் போன பாஜக எம்எல்ஏ-க்கள், பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக அதிருப்தியைக் காட்டத் தொடங்கினர். ஆளுநர் தொடங்கி டெல்லி வரைக்கும் சென்று புகார்களை குவித்தனர்.
பாஜக மாநிலத் தலைவருக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தினார்கள். இப்படி போராட்டம் நடத்திய சிலர் மீது நடவடிக்கையும் எடுத்தது மாநில பாஜக தலைமை. இருந்தபோதும், முன்னாள் மாநில தலைவர் இப்போதைய தலைவரை வெளிப்படையாகவே விமர்சித்தார். அதேபோல், அதிருப்தி பாஜக எம்எல்ஏ-க்கள் அரசுக்கு எதிராகவும் மாநில தலைமைக்கு எதிராகவும் இன்றளவும் பேசி வருகிறார்கள்.
இப்படியான சூழலில், சட்டப்பேரவைத் தேர்தலை சமாளிக்க ஏதுவாக பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிமுக கூட்டணி சுமுகமாக அமைய வேண்டும் என்பதற்காக அண்ணாமலையையே மாற்றியது போல், புதுச்சேரியிலும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்தி உட்கட்சி புகைச்சலை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக புதிய தலைவரை நியமிக்க பாஜக தலைமை முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், ராமலிங்கம் உள்ளிட்டோரின் பெயர்கள் மாநில தலைவர் பதவிக்கு பரிசீலனையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
அதேசமயம், மாநில தலைவரை நியமிப்பதற்கு முன்பாகவே 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான புதுச்சேரி மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியாவும் இணைப் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பாஜக தலைமையின் அழைப்பை ஏற்று, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் அண்மையில் டெல்லி சென்று குடியரசு துணைத் தலைவர், புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசிவிட்டு வந்திருக்கிறார். அந்த சமயத்தில் பாஜக மாநில தலைவர் செல்வகணபதி எம்பி-யும் டெல்லியில் தேர்தல் பொறுப்பாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில், அடுத்த மாநிலத் தலைவர் நீங்கள் தானாமே என்று பேரவைத் தலைவர் செல்வத்திடம் கேட்டதற்கு, “பாஜக தேசிய தலைமை சட்டப்பேரவை தலைவராகவே என்னை தொடரச் சொல்லி இருக்கிறது. தேசிய தலைமையின் விருப்பம் என்னவோ அதன்படியே நான் நடப்பேன். தேர்தல் பொறுப்பாளர்கள் எனது நண்பர்கள். அதனால் அவர்களை டெல்லி சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்துவிட்டு வந்தேன். 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி நீடிக்கும்” என்றார்.
மாநில தலைவர் மாற்றப்படலாம் என செய்திகள் வருகிறதே என பாஜக மாநில தலைவர் செல்வகணபதியிடம் கேட்டதற்கு, “மாநிலத்தின் புதிய தலைவர் நியமனம் குறித்த எந்தத் தகவலையும் கட்சித் தலைமை எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் குறித்து மாநில தேர்தல் பொறுப்பாளர்களிடம் பேசுவதற்காக மட்டுமே நான் டெல்லி சென்று வந்தேன். மற்றபடி வேறு ஒன்றும் ஸ்பெஷலாக இல்லை” என்று சொன்னார் அவர்.
தமிழகத்தில் மாநிலத் தலைவரை மாற்றியதால் பாஜக கூட்டணிக்கு சம்மதித்துவிட்டது அதிமுக. ஆனால், புதுச்சேரியில் மாநில தலைவரை மாற்றினாலும் பாஜக கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஒத்து வருவாரா என்பது அவர் வணங்கும் அந்த அப்பா பைத்தியம் சுவாமிக்குத்தான் தெரியும்!