பெங்களூரு:
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2025 சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில், அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த விராட் கோலியை போற்றும் வகையில் அவரது டெஸ்ட் ஜெர்ஸி விற்பனை பெங்களூருவில் அமோகமாக நடைபெறுகிறது.
இதற்கு காரணம் ஆர்சிபி ரசிகர்கள் தான். ஐபிஎல் சீசன் மீண்டும் தொடங்கும் நிலையில் அதன் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற கோலியை போற்றும் வகையில் இந்த ஆட்டத்தை காண வரும் ரசிகர்கள் கோலியின் டெஸ்ட் ஜெர்ஸியை அணிந்து வர வேண்டும் என ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
அதன்படி தற்போது பெங்களூருவில் விராட் கோலியின் 18-ம் நம்பர் டெஸ்ட் ஜெர்ஸி விற்பனை சூடு பிடித்துள்ளது. இதுகுறித்து வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, “ஆர்சிபி ரசிகர்களுக்கு வணக்கம். 17-ம் தேதி அன்று நடைபெறும் ஆட்டத்தில் நீங்கள் வெள்ளை நிற ஆடை அணிந்து வர திட்டமிட்டுள்ளதாக ஒரு பதிவை பார்த்ததாக நினைவு. அது உண்மையாக இருந்தால் பல யுகங்கள் கடந்து பேசப்படும் ஒரு காட்சியாக இருக்கும். இதில் ஒரே ஒரு ஆபத்து உள்ளது. வெள்ளை நிற பின்னணியில் பேட்ஸ்மேன்கள் பந்தை பார்த்து ஆடுவது கடினமாக இருக்கும்” என எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.
எது எப்படி இருந்தாலும் தங்கள் அரசனின் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்சியை கொண்டாட ஆர்சிபி ரசிகர்கள் தயாராகி விட்டனர். ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இன்னும் சில புள்ளிகளை பெற்றால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.