பெங்களூரு:
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டம் என அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் உள்ள குறைகளை தீர்க்க கடந்த மார்ச் மாதத்தில் மையங்கள் தொடங்கப்பட்டன. அப்போது சில பஞ்சாயத்துகளில் ஊதியத்தில் மோசடி அரங்கேறியதாக சிலர் புகைப்பட ஆதாரங்களை அதிகாரிகளிடம் அளித்தனர். அந்த புகைப்படங்களை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது, ஏரியில் வேலை செய்யும்போது பெண்களை போல சில ஆண்கள் சேலை அணிந்து தலையில் முக்காடு போட்டு புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்களை 100 வேலை திட்டத்துக்கான NMMS எனப்படும் தேசிய மொபைல் கண்காணிப்பு சேவையில் பதிவேற்றம் செய்து, ஊதியம் பெற்று வந்துள்ளனர். இந்த வகையில் ரூ. 3 லட்சம் வரை மோசடி செய்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
இதுகுறித்து பஞ்சாயத்து உறுப்பினர் மல்லேஷ் கூறுகையில், ‘‘சில அதிகாரிகள் கமிஷனுக்காக வெளியூர் ஆட்களை அழைத்துவந்து பணியில் அமர்த்தி கணக்கு காட்டி ஊதியம் பெற்றுள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். யாதகிரி மண்டல மேம்பாட்டு அதிகாரி சென்னபசவா கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தில் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை’’ என்றார்.