விமான நிலையத்தின் சோதனைகளைக் கடந்து உள்ளே போகும்வரை கேட்கவில்லை முல்லையின் கணவன் முத்துராமன்.முதன் முதலாக அயல்நாட்டுப் பயணம். வழியனுப்ப வந்திருக்கிறார்கள்.
சக்கர நாற்காலியில் முத்துராமனின் விதவைத் தாய் சரளா. முத்துராமனின் மனைவி மற்றும் பிள்ளை, முத்துராமனின் அண்ணன், அண்ணி மற்றும் பிள்ளைகள் புடைசூழ.
எப்பத் திரும்பி வருவான்னு தெரியாது. கொஞ்சம் எங்கூடப் பேசிட்டுப் போச்சொல்லு பெரியவனே என்று முத்துராமனின் அண்ணனிடம் கெஞ்சினாள் சரளா.
சரிம்மா இரு கூப்பிடறேன்.. முத்து.. அம்மா உங்கிட்டப் பேசணுமாம்..
வரேன்..வரேன்.. என்றபடி மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தான் முத்துராமன். அவன் பிள்ளை விளையாடிக்கொண்டிருக்க அதனுடன் விளையாடினான் முத்துராமன்.
அப்பா வரும்போது எனக்கு நிறைய பொம்மைங்க வாங்கிட்டு வரணும்.. எல்லாம் காரு பொம்மைங்கதான்.. சரியா..
உனக்கு இல்லாமலா.. உனக்காவும் உங்க அம்மாவுக்கும்தான் நான் வெளிநாடு போறதே.. என்றான் மகிழ்ச்சியாய்.
டேய் பெரியவனே அவனைக் கூப்பிடுடா.. அவங்கிட்டப் பேசணும்.. திரும்பி வர்றப்பா நான் இருக்கனோ இல்லியோ என்றாள் சரளா..
வரேன்.. கொஞ்சம் எம்புள்ளகிட்டப் பேச விடறாங்களா பாரு.. என்று பேசிவிட்டு மறுபடியும் பிள்ளையுடன் விளையாடினான்.. கொஞ்ச நேரம் கழிச்சு.. சட்டென்று செக்இன்னுக்கு நேரமாயிடிச்சு வரேன்.. என்றபடி பை..சொல்லிவிட்டு.. அண்ணே நான் உள்ளே போய் செக்கிங் முடிச்சிட்டு கேட்டுல இருந்து விடியோ கால்ல கூப்பிடுறேன்.. அம்மாவ என்றபடி உள்ளே போனான்.
சரளா.. பத்திரமாப் போயிட்டு வா என்று கையசைத்தாள்.
பெரியவனே என்னால முடியல என்ன காருக்கு அழைச்சிட்டு போடா என்றாள் சரளா.
வாம்மா போகலாம் என்று காருக்கு சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு போனான்.
காருக்குள் ஏற்றிப் படுக்கவைத்து ஏசியைப் போட்டுவிட்டான். அப்படியே படுத்தவள் உறங்கிப்போனாள்.
கேட்டிலிருந்து மனைவி பிள்ளையிடம் பேசிய முத்துராமன் அண்ணனைக் கூப்பிட்டுப் பேசினான்.. அண்ணே.. ஒரு சின்ன வேண்டுகோள்.. நீ நாளைக்கு அம்மாவ அழச்சிட்டுப்போயி அவங்களுக்கு எல்லாப் பரிசோதனையும் எடுத்துண்ணே.. எந்தக் கோளாறும் அம்மாவுக்கு வந்துடக்கூடாது.. நான் பணம் அனுப்பறேன் என்றான்.
ஏண்டா..முத்து.. இப்பத்தான் ஒரு மாசம் ஆவுது ஒரு கோளாறும் இல்ல.. மாத்திரைங்கள ஒழுங்கா சாப்பிட்டா போதும்னு டாக்டர் சொல்லிட்டாரு.. எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்துதான் டாக்டர் சொன்னாரு.. என்றான்.
மனைவியிடம் சொன்னான் முத்துராமனின் அண்ணன்.
வேறொண்ணுமில்ல.. இப்பத்தானே செலவு பண்ணி வெளிநாடு போறாரு.. உங்கம்மாவுக்கு ஏதுன்னா உடனே திரும்பி வரமுடியாது.. செலவு ஆகும்.. எல்லாமும் கெட்டுப்போயிடும். அதான்.. அம்மா மேல பெரிய பாசம் மாதிரி காட்டிக்கறாரு.. பிள்ளையோட விளையாடுறாரு.. ரெண்டு வார்த்தை உங்கம்மாகிட்ட பேச முடியல.. வாங்க போகலாம் என்று நடந்தாள்.
ஹரணி, தஞ்சாவூர்.