இன்று வெள்ளிக்கிழமை அமாவாசை. வழக்கம்போல குளித்துவிட்டு ஒரு தேநீரை மட்டும் அருந்திவிட்டுக் கோயிலுக்குப் போய் வணங்கிவிட்டு பின் கடைத்தெருவில் விரதம் செய்வதற்கு வாழையிலை மற்றும் அகத்திக்கீரையும் வாங்கிக்கொண்டு கிளம்பினான் மதியழகன். தெரு முனையில் ஒரு பத்தர் வீடு இருக்கிறது. அந்த வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பத்தர் வீட்டுக் காலிமனையில் பசுமாடுகள் கட்டி வைத்திருப்பார்கள். அங்கே போய்த்தான் அகத்திக் கீரை கொடுப்பது வழக்கம்.
போனால் அங்கே செம்மண் லோடு இறங்கிக்கொண்டிருந்தது. மாடுகள் இல்லை. என்ன செய்வதுதென்று தெரியவில்லை.
அப்போதுதான் கணேசனைப் பார்த்தான். அவனோடு படித்தவன். அவனும் கையில் அகத்திகீரைக் கட்டுடன் வந்துகொண்டிருந்தான். பத்தர் வீட்டு மாட்டுக்குத்தான் அவனும் கொடுப்பான். வந்து பார்த்துவிட்டு மேலும் நடந்தான்.
எங்கே போகிறான்? எங்கே மாடுகள் இருக்கும்? என்று மதியழகன் யோசித்தான்.
கணேசன் அருகிலிருந்து அரிசிமில் களத்திற்குள் போனான். அப்புறம்தான் மதியழகனுக்கும் நினைவுக்கு வந்தது.. அரிசிமில்லுக்காரர்கள் வீட்டிலும் இரண்டு பசு மாடுகள் இருப்பது.. உடனே இவனும் கணேசா.. இரு என்றபடி அழைத்து அவன் பின்னாலே போய் அகத்திகீரையைப் பசுக்களுக்குக் கொடுத்துவிட்டு.. சேர்ந்து வந்தார்கள்.
என்ன கணேசா எப்படி இருக்கே? என்றான் மதியழகன்.
இருக்கேன்.. பூமிக்குப் பாரமா சோத்துக் கேடா என்றான் சலிப்புடன்.
என்ன ஆயிற்று கணேசா..? அதான் மகளையும் கட்டிக்கொடுத்துட்டே.. மகனையும் கட்டிக்கொடுத்துட்டே..அப்புறம் என்ன? புள்ள என்ன பண்ணறான்? என்றான்.
அவனோட பேசி ஒரு வருஷமாச்சு என்றான்.
என்னாச்சு என்றான் மதியழகன்.
எனக்குப் போட்டியாக் கடை தொடங்கியிருக்கான் என்றான் கணேசன்.
மதியழகனுக்குப் புரிந்தது.
படிக்கிற காலத்தில் இருந்தே எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ள மாட்டான் கணேசன். குறுக்கு வழியில், செல்வாக்கில்தான் காரியத்தைச் சாதிப்பான். வேலைக்குப் போகலியா என்று கேட்டதற்கு எங்க அப்பா.. எனக்குப் பணக்கார இடமாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன். மாமனார் வீட்டுக் காச வச்சுப் பொழச்சுக்கோன்னு சொன்னாரு.. அதனாலப் போகலேன்னு சொன்னான்.. கணேசன் பட்டப்படிப்பு வரைக்கும்தான் படிச்சான்.. அதனாலப் படிக்காத பெண்ணாத் தேடி வசதியான குடும்பமான்னுப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்க..என்னென்னமோ பிசினஸ் பண்ணறேன்னு ஒண்ணும் உருப்படியா இல்ல.. கடைசிலே அவங்க மாமா வச்ச மளிகைக் கடையில பார்ட்னரா ஆனான்.. இப்போ இதே கடைய கணேசன் மகன் போட்டியாத் திறந்திருக்கான்.. போட்டிதான் கணேசனுக்குப் பிடிக்காதே.. மகனோட போட்டிப்போட முடியுமா?
ஹரணி, தஞ்சாவூர்.