Breaking News:
tamilnadu epaper

போப்பின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது வாடிகன்

போப்பின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது வாடிகன்

போப் பிரான்சிஸ், பலிப்பீடத்தின்முன் அமர்ந்து இருக்கும் புதிய புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


ஜெமில்லி மருத்துவமனையில் சக பாதியார்களுடன் அவர் திருப்பலியில் கலந்து கொண்டதாகவும், அவரின் உடல்நிலை தற்போது முன்னேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் பின்னால் இருந்து எடுக்கப்பட்டது.


அதில், போப் பிரான்சிஸ் ஊதா நிற சட்டை அணிந்தபடி பலிபீடத்தின் முன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. பிப்ரவரி 14 ஆம் தேதி மருத்துவமனையில் போப் அனுமதிக்கப்பட்ட பிறகு வெளியான முதல் புகைப்படம் இதுவாகும்.


போப் பிரான்சிஸ்(88) மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பிப். 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.


அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு ஆண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

 

இதனிடையே, அவரது சிறுநீரகங்கள் லேசான பாதிப்புக்குள்ளாகியிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டிருப்பதாகவும் பிப். 23 மருத்துவர்கள் தெரிவித்தனர்.


அவருக்கு மார்ச் 3 மூச்சு விடுவதில் மீண்டும் சிரமம் ஏற்பட்டதாகவும், நுரையீரல் பாதிப்பு அதிகரித்ததையும் தொடர்ந்து மீண்டும் வெண்டிலேட்டர் மாற்றப்பட்டு அதன் உதவியுடன் அவர் சுவாசித்ததாக வாடிகன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.