tamilnadu epaper

போஸ்ட் ஆஃபீஸ்

போஸ்ட் ஆஃபீஸ்

மகளின் கல்யாணப் பத்திரிக்கைகளை ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் செய்வதற்காக போஸ்ட் ஆபீஸ்கு கிளம்பினார் சங்கரன்.

போஸ்ட் ஆபீஸில் ஸ்டாம்ப் வாங்கி ஒவ்வொரு கவரிலும் ஸ்டாம்ப் ஒட்டிக் கொண்டிருந்தார்.

"சார் கொஞ்சம் பேனா குடுக்க முடியமா? " என்று கேட்டான் அவர் ஷர்ட் பாக்கெட்டிலிருந்த பேனாவைப்பார்த்த ஒரு இளைஞன். 

 

திரும்பி ப்பார்த்த சங்கரன் அந்த இளைஞனின் ஷர்ட் பாக்கெட்டில் இருந்த தலைவாரும் சீப்பைப் பார்த்தார். 

 

"சாரி, நான் என் பேனாவை யாருக்கும் கொடுக்கறதில்லேப்பா. ஏம்பா தலை வார சீப்பு மறக்காமெ கொண்டு வரத்தெரியுது. ஆனா பேனா கொண்டு வரத்தெரியலையா?"

 

சங்கரன் சொன்னதைக் கேட்க அந்த இளைஞன் அங்கே இருந்தால்தானே! 

 

அதற்குள் போஸ்ட் ஆஃபீஸ் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருந்த பத்மநாபன் அந்த இளைஞனைக் கூப்பிட்டு அவரிடம் இருந்த பேனாவைக் கொடுத்தார். அந்தப்பேனாவால் அட்ரஸ் எழுதி ஸ்பீட் போஸ்ட் கவுன்டரில் கவரைக் கொடுத்தான் அந்த இளைஞன்.

நாற்பது ரூபாய்க்கு ஸ்டாம்ப் ஒட்டிக் கொடுக்கச் சொன்னார் கவுன்டர் கிளார்க். ஸ்டாம்ப் வாங்கி விட்டான் அந்த இளைஞன்.

 

 அதை கவரில் ஒட்ட கோந்து தேடினான். போஸ்ட் ஆஃபீஸ் ஜன்னல் ஓரத்தில் பச்சைக் கலரில் இருந்த கோந்து காய்ந்து போயிருந்தது. திரும்பவும் பத்மநாபன் அந்த இளைஞனைக் கூப்பிட்டார்.தன் தோள் பையிலிருந்து கம் பாட்டில் எடுத்துக் கொடுத்தார். இளைஞன் ஸ்டாம்ப் ஒட்டி கவரை ஸ்பீட் போஸ்ட் கவுன்டரில் கொடுத்து விட்டு பத்மநாபனுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினான்.

 

ஒரு அரை மணி நேரத்தில் இதேபோல் ஐந்தாறு இளைஞர்களும் இளைஞிகளும் பத்மநாபனிடம் பேனா, கோந்து,செல்லோ டேப்,ஸ்டேப்ளர் என்று எல்லா ஸ்டேஷனரி மையும் வாங்கி உபயோகித்து திருப்பிக் கொடுத்தார்கள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சங்கரன் பத்மநாபனிடம் சென்றார்.

" சார் நமஸ்காரம்.என் பேர் சங்கரன்.ரிடையர்ட் ரயில்வே ஆபீஸர். உங்களிடம் ஒன்று கேட்க லாமா? தப்பா நினைக்கக்கூடாது.

 

"தாராளமாகக் கேளுங்கள் சார்."

 

"நானும் அரைமணி நேரமா பார்த்து கிட்டிருக்கேன். வர்றவங்க போறவங்களுக்கெல்லாம் எல்லா ஸ்டேஷனரியும் கொடுக்கறீங்க. பர்டிகுலர்லி இந்த இளைஞர்கள். போஸ்ட் ஆஃபீஸ்கு வர்ரப்போ பேனா கூட எடுத்திட்டு வராதவங்களக்கெல்லாம் ஏன் சார் ஹெல்ப் பண்றீங்க. பையன்கள் எல்லாம் தவறாமெ பாக்கெட்லெ சீப்பு வெச்சிருக்காங்க. பொண்ணுங்கல்லாம் பேக்லெ லிப்ஸ்டிக் பவுடர் எல்லாம் வெச்சிருக்காங்க.ஒரு பேனா வெச்சு க்கத்தெரியலையா சார். நீங்க வேறெ ஃப்ரீ ஸ்டேஷனரி கடையே வெச்சிருக்கீங்க போஸ்ட் ஆஃபீஸ் லெ. உங்க மாதிரி ஆளுங்களாலெதான் இந்த ஜெனரேஷன் சோம்பேறிகளாவும் பொறுப்பு இல்லாமலும் இருக்காங்க.இதெல்லாம் பண்ணாதீங்க சார்". மனதில் இருந்த வெறுப்பை வெளியே கொட்டி விட்டார் சங்கரன்.

 

" சங்கரன் சார்.என் பெயர் பத்மநாபன்.ரிடைர்டு பேங்க் ஆபீசர். இங்கெதான் பக்கத்திலெ வீடு. எனக்கு ரெண்டு பசங்க.ரெண்டுபேரும் ஃபாரின்லெ செட்டில் ஆயிட்டாங்க. வருஷத்துக்கு ஒருதடவை வருவாங்க. ரெண்டு வாரம் இருந்துட்டு போயிடுவாங்க. நானும் என் ஆத்துக்காரியும் இங்கே இருக்கோம்.

நான் தினமும் சாப்டுட்டு ஒன் அவர் ரெஸ்ட் எடுத்துட்டு மத்தியானம் மூணு மணியிலேருந்து ஐந்து மணி வரை இங்கே

இருப்பேன்.எல்லா ஸ்டேஷனரி ஐடம்ஸ் வாங்கி பையிலேயே கொண்டு வருவேன்.

இங்கே யார் யாருக்கெல்லாம் தேவைப்படுதோ அவர்களுக்கெல்லாம் கொடுக்கிறேன்.

இந்த காலத்து பசங்க பாவம் சார்.ஏதோ நல்ல பணம் சம்பாதிக்க றாங்க. ஆனா அவங்களுக்கு மனசு சந்தோஷமே இல்லெ சார்.எப்பவுமே டென்ஷனில் இருக்காங்க. நல்ல சாப்பாடு இல்லெ. டிராபிக்லெயெ அவங்க எனர்ஜியெல்லாம் போயிடுது. நம்ம லைஃப் ஈஸியாக இருந்தது.இப்போ பாவம் சார் லைஃப் ரொம்ப கஷ்டம் சார்.ஏதோ நம்மால் ஆன ஒரு சின்ன சோஷியல் ஸர்வீஸ். சில பெரியவர்களும் வர்ராங்க.கண் பார்வை சரியா இல்லாததாலெ எழுதமுடியறதில்லெ. எழுதப் படிக்கத் தெரியாதவர்களும் வர்ராங்க. என்னென்னவோ வித விதமான பிரச்சினைகள். இவங்களுக்கெல்லாம் ஹெல்ப் பண்ணினா ஏதோ ஒரு மனசு திருப்தி. 

 

மார்னிங் வாக் போறப்பொ, கோவில், காய்கறி மார்க்கெட் இங்கெல்லாம் என்னெப்பார்க்கறவங்க என்னெ " ஸ்டேஷனரி அங்கிள்" னு கூப்பிடறாங்க"

 

ஒரு குட்டி லெக்சர் அடித்து விட்டார் பத்மநாபன்.

 

பத்மநாபன் சொன்னது சங்கரன் மனதைக் தொட்டுவிட்டது. எப்பொழுது பார்த்தாலும் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்று சட்டம் பேசிக் கொண்டிருக்காமல் நாலு பேருக்கு உதவி யாக இருப்பது நிச்சயம் சந்தோஷம் கொடுக்கக் கூடியதுதான். தானும் இதுமாதிரி ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவுடன் போஸ்ட் ஆஃபீஸ் விட்டு வெளியேறினார் சங்கரன்.

 

-முரளிதரன் ராமராவ் , புனே