சென்னை,
தமிழகத்தில் உள்ள ஒரு மதுபான பாரில் பெண்கள் கூட்டாக அமர்ந்து மது குடிப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மதுவுக்கு எதிராக தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த வீடியோ புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. இந்த விவகாரம் பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் பொய்யான தகவல். இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல. கடந்த 4-ந் தேதியன்று தெலுங்கானாவை சேர்ந்த சமூக ஊடக பக்கங்களில் இந்த வீடியோ பதிவிடப்பட்டது. வீடியோவில் உள்ள தெலுங்கு எழுத்துகளை மறைத்து தமிழ்நாட்டில் நடந்தது என திரித்து பரப்பப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.