பிரசாத்தும் காஞ்சனாவும்
ப்ளஸ் டூ படிக்கும் மகள் சஞ்சனாவும் உள்ளே நுழைந்தார்கள்.
சொல்லி வைத்த மாதிரி ஒரே ஒரு டேபிள் மட்டும் காலியாக இருந்தது.
ஆர்டர் செய்து விட்டு வருவதற்குள்
நேற்று பார்த்து விட்டு வந்த புதுப் படத்தைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக விமர்சனம் செய்து முடித்து விட்டாள் காஞ்சனா.
அவள் இப்படித்தான் . மாதம் ஒருமுறை தியேட்டருக்குக் குடும்பத்துடன் சென்று அது எந்த
குப்பைப் படமாக இருந்தாலும்
பார்த்து விட வேண்டும். 'பட்ஜெட் எகிறுது.ஓடிடியில் பார்த்துக்கோயேன் 'என்று சொன்னாலும் கேட்க மாட்டாள்.
நாலு நாளுக்கு ஒரு முறை ஹோட்டலில் சாப்பிட்டே ஆக வேண்டும் 'இந்த லேடீஸ்கள் எல்லாம் வீட்ல சமைக்கவே மாட்டாங்களா..
எந்த டேபிள்ல பார்த்தாலும் அவங்களாவே இருக்கிறாங்க' என்று கமெண்ட் வேறு அடிப்பாள்.
ஹோட்டலின் உரிமையாளர் சாரதியும் பிரசாத்தும் நண்பர்கள். அந்த உரிமையில்
அவன் ஹோட்டலில் எங்கு வேண்டுமானாலும் செல்வான்.
கிச்சனைக் கூட விட்டு வைப்பதில்லை.
"சஞ்சனா சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும்.. வாயேன்
அப்படியே ஹோட்டலை சுத்திப் பார்த்து விட்டு வரலாம்" என்று கூப்பிட இருவரும் கிளம்பினார்கள்.
அடுத்த வாரத்தில் ஒரு நாள்.
"சாயந்தரம் ரெண்டு பேரும் ரெடியா இருங்க . டிபன்
சாப்பிடப் போகலாம் " என்று பிரசாத் சொல்லவும்
"இல்லே வேண்டாங்க.. இனிமேல்
நான் அங்கே எல்லாம் வர்ரதா இல்லே. அன்னைக்கு அந்த ஹோட்டலோட கிச்சன்ல.. அந்த மாஸ்டர்கள் படற கஷ்டத்தைப்
பார்த்து ரொம்ப வேதனையா போச்சுங்க.இதே மாதிரிதானே
ஏதோ ஒரு ஹோட்டல்ல மாஸ்டரா இருக்கிற எங்க அப்பாவும் கஷ்டப் பட்டுகிட்டு இருப்பாரு. இத்தனை நாளா இதை நினைக்காம நான் பாட்டுக்கு ஜாலியா வந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்திருக்கேன்.
என்னை நினைச்சா எனக்கே
அசிங்கமா இருக்கு. இந்த செலவை எல்லாம் நிறுத்திட்டு மாசம் ஒரு தடவை அவரை நம்ம வீட்டுக்குக் கூட்டி வந்து நல்லா விருந்து வைச்சு சிறப்பா கவனிக்கனும்ங்க"
என்ற காஞ்சனாவை நெகிழ்ச்சியுடன் பார்த்தான் பிரசாத்
-மு.மதிவாணன்
குபேந்திரன் நகர்
அரூர் 636903
9080680858
9159423090