அம்மா, என்னைக் கையசைத்துக் கூப்பிட்டாள். ' நீ யார்? இங்கே என்ன செய்கிறாய்?' நான் பக்கத்தில் போய் ஆதரவாய் கையைப் பற்றினேன்.' உன் பெயர் எனக்கு மறந்து விட்டது. எனக்கு ஒரு மகள் உண்டு. அவள் பெயர் கூட நினைவில்லை.' என்றதும்; எனக்கு மிகுந்த வருத்தம் மாயிற்று. 'நான்தான் அம்மா உங்கள் புவனி. ' அட! ஆமாம்! நீ வேலைக்கு போகலையா? உன் ஜீப் இன்று வராதா?'. நான் என் அம்மாவின் உடல்நிலை காரணமாக பணி ஓய்வு பெற்று மூன்று வருடங்கள் ஆகிறது. அம்மாவுக்கு எல்லாம் மறந்து போய்விட்டது போல் இருக்கிறது.' அம்மா நேரமாகி விட்டது. காஃபி கொண்டு வரவா?' என்று நான் வினவ ' இருக்கட்டும்! அவன் வந்ததும் சேர்ந்தே சாப்பிடலாம். அவன் காலேஜில் இருந்து வரும் நேரம் தானே?' அவன் என்று அம்மா குறிப்பிட்டது ' பத்து வருடத்திற்கு முன் மேல் படிப்புக்காக அமெரிக்கா போன என் அண்ணன் மகன் நந்தனைத் தான். வாழ்க்கையின் விட்டுப் போன பாவு நூல்களை முடிந்து வைக்க எந்த ஒரு முயற்சியும் அவள் மனம் எடுத்துக் கொள்ளவில்லை. அதற்காக மனம் உறைந்த நிலையில் இருப்பதாக எவரும் தவறாக எண்ண வேண்டாம். பாவு நூல் அறுந்து அங்கங்கே தொங்கி கொண்டிருப்பதை அவள் உணர்ந்தவளாக இல்லை. நினைவுகள் முன்னும் பின்னும் அவளை அலைக்கழிக்கிறது.
வாயிலில் அழைப்பு மணி யோசை கேட்டு கதவைத் திறந்தவள், திடுக்கிட்டு நின்றுவிட்டேன். வந்தவன்; வேறு யாருமில்லை; என் அண்ணன், ஜெகதீசன் தான். ' அம்மா, எப்படி இருக்கா? என்னால்தான் உனக்கு எத்தனை தொந்தரவு! அம்மாவைப் பார்க்கும் பொறுப்பை உன்னிடம் சாட்டி விட்டேன். ரொம்பவும் வருத்தமாயிருக்கிறது. இவளைப் பார்ப்பேனா; கமலினியை கவனிப்பேனா? கம்பெனி வேலைகளைப் பார்ப்பேனா? முதியோர் நிலையத்தில் விட்டதில், ஏகப்பட்ட பிரச்சினைகள். எல்லோரையும் துருவித் துருவி கேள்விகள் கேட்டு, கேட்காத ஆலோசனைகளை சொல்லிச் சொல்லி ஒரே தொந்தரவு. ஃபோன் பண்ணி தயவு செய்து கூட்டிப் போய் விடுங்கள்; என்று கேட்டுக் கொண்டதில் பேரில் உன்னிடம் கொண்டு விடும்படி நேர்ந்து விட்டது." என்று தழைவுடன் சொன்னவனை,"வா! அண்ணா! நான் ஃபோன் பண்ணாமல் திடுமென உன்னைப் பார்த்ததும் திடுக்கிட்டு விட்டேன். அம்மாவின் பொறுப்பு இருவருக்கும் பொதுவானது தானே! அண்ணி தற்போது நலமா? சிகிச்சை தொடர்ந்து நடக்கிறதா' என்று கேட்டவளுக்கு 'ம்' என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்ன அண்ணனைக் கண் டதும், அம்மாவின் முகத்தில் ஒரு மலர்வு. ' வா! குழந்தே! எனக்குத் தெரியும். நீ என்னைக் கூட்டிண்டு போக வருவேன்னு சித்த முன்னாடி கூட புவனி கிட்ட சொல்லிண்டுதான் இருந்தேன். அப்பா எப்படி இருக்கிறார்? அவர் ஏன் எனக்கு ஃபோன் பண்ணவே இல்லை? அவருக்கு என் நினைப்பே இல்லையா? அவரைப் பிரிந்து இருப்பது எனக்கு அனல் மேல் இருப்பது போல் இருக்கிறது. என்னை அவர் கிட்ட கூட்டிட்டு போயிடு.ஃபேனைப் போடு; புவனி! அவ நன்றாக இருக்கிறாளா? அவ ஏன் என்னைப் பார்க்க வரவில்லை.? 'என்று படபடவென அம்மா பேசிக்கொண்டே போனாள். இப்போது, 'அவள்' என்பது என் அண்ணியை.இரண்டு வருடமாக புற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் என் அண்ணி,கமலினியால் எப்படி ரயில் ஏறி பயணம் பண்ண வர இயலும்? மனத் தறியில் இன்னொரு சிக்கல்; முடிச்சுடன். அதை நேர் செய்யும் நினைப்போ, முனைப்போ இல்லாத மனம்.
' புவனி! நாளை மறுநாள் அப்பாவின் நிதி வருகிறது; இல்லையா! அதற்காகத்தான் நான் இங்கு நான் வந்திருக்கிறேன். அம்மாவுக்கு ஞாபகமே இல்லையா? என்று கேட்டான்.'' "அண்ணா! வேண்டாம்! அப்பாவுக்கு திதி கொடுக்க வேண்டாம்.அம்மா நினைவுகளின் கூட்டில் இருக்கிறாள். அவளை அப்படியே விட்டு விடேன். ஒருநாள், இந்த உயிர் கூட்டிலிருந்து வண்ணத்துப்பூச்சியாய், அது பறந்து விடும். அது வரை காத்திருப்போம். பாவம்! அவள் இருக்கும் மட்டும் இப்படியே இருந்துவிட்டு போகட்டுமே!' என்றதும், யதார்த்தத்தை புரிந்து கொண்ட அண்ணன் ஜகதீசனின் நெஞ்சு விம்மி அடங்கியது; கண்ணீர நிறைந்த கண்களுடன்.
-சசிகலா விஸ்வநாதன்