tamilnadu epaper

மீனாட்சிப் பாட்டி…

மீனாட்சிப் பாட்டி…

ராணுவத்தில் தன் கணவனை இழந்த மீனாட்சிப்பாட்டிக்கு உறவுகள் திரும்பவும் கல்யாணம் செய்துவைக்கவில்லை.தனியாகவே காலத்தை ஓட்டி விட்டாள். கீழத்தெரு கடைசியில் பாட்டிக்குச் சொந்தமான குடிசை ஒன்று உண்டு. அதன் வாசலில் சிறிதாய் ஒரு பெட்டிக் கடை. அதில் வரும் வருமானம் அந்த ஒற்றை வயிறுக்குப் போதுமானதாய் இருந்தது.

மாலை ஆறுமணியாகிவிட்டால் சிறுவர்- சிறுமியர், பாட்டி வீட்டுக் குடிசையின் சாணம் மெழுகிய திண்ணையில் கூடி விடுவர். பாட்டி தனக்குத் தெரிந்த ராமாயண-மகாபாரதக் கதைகள், ஊரார் கூறத் தன் செவிப்பறைகளில் சேமித்த கதைகள்,வீதி நாடகங்களில் சொல்லப்பட்ட கிண்டல் கதைகள் எல்லாவற்றையும் பிள்ளைகளுக்குச் சொல்லுவாள். 

இன்றும் பிள்ளைகள் வந்து விட்டார்கள். பாட்டி பலகைகளை எடுத்து வைத்துக் கடையை அடைத்துப் பூட்டினாள். திண்ணையில் வந்து கால் நீட்டி அமர்ந்து கொண்டாள்.-``பிள்ளைகளா, பழமொழி பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா?”

``எங்க அப்பத்தா நிறையப் பழமொழி சொல்லும் பாட்டி!”-என்றான் செழியன். 

``ஏதாவது ஒண்ணை நீ இங்கே சொல்லு பார்க்கலாம்!”

``ம்ம்ம்”-என்று சற்றே யோசித்தவன்,`சுள்ளாப்புக்கு ஒரு பொல்லாப்பு உண்டு!’…அப்படின்னா சுள்ளுனு வெயில் அடிச்சா நிச்சயம் மழை வருமாம்!”

``நல்லா சொன்னான் செழியன்…எல்லாரும் கைத்தட்டுங்க!”-என்று பாட்டி சொல்லவும், குழந்தைகள் கைத்தட்டினார்கள். 

``இதே போலச் சில பழமொழிகளை மக்கள் தப்பா அர்த்தம் பண்ணிக்கிட்டாங்க….`சட்டியில் இருந்தா ஆப்பையில் வரும்னு!’ சொல்றாங்க இல்லையா, அதாவது சட்டியில சோறு இருந்தாத்தான் ஆப்பையில் அள்ளும்போது வரும்னு அர்த்தம் சொல்லுவாங்க… ஆனா அது தவறு…அதுக்கு உண்மையான அர்த்தம் என்னான்னா, `சஷ்டியில் கணவன்-மனைவி விரதம் இருந்தால்,அகப்பையில்,அதாவது கருப்பையில் குழந்தை உருவாகுமாம்!”

குழந்தைகள் கரவொலி எழுப்பினார்கள். 

``தரையடி தப்பல் இல்!’-னு ஒரு பழமொழி… அதாவது தரையில் கொம்பால அடிச்சா அது உன் முதுகில் திரும்ப விழும்னு சொல்லுவாங்க!”

``ஆமா பாட்டி, எங்கம்மாவும் சொல்லும்!”

``ஆனால் அது அர்த்தமில்லை… தரையில் அடிச்சா, நிச்சயம் தரையில்தான் விழும்… வேறு எங்கேயும் விழாதுன்னு அர்த்தம்… சரி பிள்ளைங்களா, நாளைக்குப் பார்க்கலாம்!”-என்று பாட்டி சொன்னதும், குழந்தைகள் தத்தமது வீட்டுக்குக் கிளம்பினார்கள். ஃ ஃ ஃ முகவரி; பி.எல்.ராஜகோபாலன், 19-சவுக்கண்டித்தெரு, பட்டுக்கோட்டை-614601.