tamilnadu epaper

முடிச்சு

முடிச்சு

ஆபீஸில் நாளை போர்டு மீட்டிங். எம்.டி.யின் பர்ஸனல் செகரட்டரி காயத்ரி பிரசவ லீவில் சென்றிருப்பதால் இம்முறை தீர்மானங்களை எழுதி வாசிக்கும் பணி என் தலையில் விழுந்த்து. "திவாகர்… நாளைக்கு மீட்டிங்கிற்கு வரும் போது நீட்டா டிரஸ் பண்ணிட்டு ‘டை‘ கட்டிட்டு வரணும்…என்ன?” எம்.டி.அதிகாரத் தோரணையில் கட்டளையிட்டு விட்டுச் செல்ல,

 

 அவர் ஆணைப்படி அன்று மாலையே கடை வீதிக்குச் சென்று ‘டை‘வாங்கினேன்.  

 

    வீட்டிற்கு வந்த பிறகுதான் உறைத்தது, அவசரத்தில் ‘நாட்‘ போடாமல் வாங்கி வந்தது. “அய்ய்ய்யோ...தப்பு பண்ணிட்டேனே?” எடுத்துக் கொண்டு ஓடினேன். கடை மூடப்பட்டிருந்தது. எனக்குத் தெரிந்த எல்லா நண்பர்களிடமும் கேட்டுப் பார்த்து விட்டேன். 

 

 “அடப் போப்பா... நமக்கு இதெல்லாம் பழக்கமில்லை”. எல்லோரும் நழுவி விட, ஒரு நண்பரின் அட்வைஸ்படி டெய்லர்களை அணுகிப் பார்த்தேன். எல்லோருமே உதட்டைப் பிதுக்கினர்.

 

 “போச்சு... நாளைக்கு நல்லா மாட்டப் போறேன்!... எம்.டி.அத்தனை பேர் முன்னிலையில் என்னை பதம் பார்க்கப் போகிறார்!”.   

 

    நொந்து போய் இரவு பத்தே முக்கால் மணிக்கு வீடு வந்து சேர்ந்தவன், அந்த ‘டை‘யை சோபா மீது எறிந்து விட்டு பாத்ரூமிற்குள் புகுந்தேன்.  

 

    திரும்பி வந்த போது நான்காவது படிக்கும் என் மகள் அதைக் கையில் வைத்திருக்கக் கத்தினேன். 

 

    “ஏய்... மூதேவி... அதை எதுக்கு எடுத்தே?” எங்கோ போக வேண்டிய என் கோபம் அவள் மீது பாய,

 

 'நாட் போட்டேன்ப்பா” என்றபடி அவள் ‘டை‘யை நீட்டினாள்.

 

 வாங்கிப் பார்த்தேன். அருமையாகப் போடப்பட்டிருந்தது முடிச்சு.

 

(முற்றும்)

 

முகில் தினகரன், கோவை