தனியார் பள்ளி ஆண்டு விழா,
ஆரவாரமாக சென்று கொண்டிருந்த பள்ளி ஆண்டு விழாவில் , பேச்சு போட்டி நடந்து கொண்டிருந்தது.
தன் மகனின் பேச்சை கேட்க , மிகுந்த ஆர்வமாக முன் வரிசையில் அமர்ந்து இருந்த வினோத் மற்றும் ஹாசினி.
“ பேச்சு போட்டியில் இறுதியாக மாணவன் அபிஷேக் -6 ம் வகுப்பு , முதியோர் இல்லம் என்ற தலைப்பில் பேசுவார் “ என்று ஆசிரியையின் அறிவிப்பு வந்தது.
வினோத் மற்றும் ஹாசினி கைத்தட்டலுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அனைவரின் கைதட்டல் சப்தத்துடன் மேடையில் மாணவன் அபிஷேக் வந்து நின்றான். பேச்சை துவங்கினான்.
“அனைவருக்கும் என் இனிய வணக்கம். எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு முதியோர் இல்லம். முதியோர் இல்லம், வளர வேண்டிய அல்லது வளர்க்கப்பட வேண்டிய இல்லம் அல்ல.ஆதரவு அற்ற, அனாதைகளான, முதியோர்களுக்கானது தான் முதியோர் இல்லம்.”
“ஆனால் இன்றைய முதியோர் இல்லம் , முதியோர்களுக்கான தங்கும் விடுதியாக மாறிவிட்டது. பெற்ற பிள்ளைகள் இருந்தும் முதியோர் இல்லத்தில் தங்க வைக்க படும் அவல நிலையில் இன்றைய முதியோர் இல்லம். இதற்கு வெட்கப்படவேண்டியது பிள்ளைகள் தான். தன்னை பெற்று வளர்த்த பெற்றவர்களை தன்னால் கவனிக்க கூட முடியாமல் மூன்றாம் நபரிடம் ஒப்படைத்து விட்டு செல்வது வெட்கக்கேடான விஷயம்”.
“பெற்றவர்களை கவனிக்க கூட நேரமில்லை என்று கூறிக்கொண்டு பணம் சம்பாதிப்பது எதற்கு ?. உங்கள் பிள்ளைகளை வளர்க்கவா!.
பெற்றவர்களை பாரமாக நினைக்காதீங்க. உங்க பிள்ளைகளுக்கு அவர்கள் வாழ்க்கை நல்ல அனுபவம் தரும்.”
“எத்தனையோ தாத்தா பாட்டிகள் இருந்தும் , அவர்களின் அன்பு கிடைக்காம பேரக்குழந்தைகள் இருக்கத்தான் செய்றாங்க.”
“இது என்னை போன்ற அனைத்து பேரக்குழந்தைகளின் கருத்தாக உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன் “.
தன் பேச்சை கண்களில் கண்ணீரோடு நிறைவு செய்து கொண்டிருந்த அபிஷேக்கை கண்டு , முதல் ஆளாக எழுந்து கைதட்டி பாராட்டுகளை தெரிவித்தான் வினோத்.
கைதட்டியபடி , அங்கிருந்து நகர்ந்த வினோத்தின் கையை இருக பற்றியவாறு , ஹாசினி “ எங்க போறீங்க ? “என்று கேட்க,
“ என் அப்பா-அம்மாவ முதியோர் இல்லத்துல இருந்து நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர போறேன் “ என்ற வினோத்தின் பதில் அவளுக்கு ஒரு விதமான தவறை உணர்த்தியது
இருப்பினும் இருக்க பிடித்த வினோத்தின் கையை விட மனம் இல்லாமல் இருந்த அவளுக்கு , தன் மகனின் பேச்சிற்கு கிடைத்த அந்த கைதட்டல் சப்தம் அவளின் மனதை மாற்றியது.
“நானும் வரேன்” , என்று கண்களில் கண்ணீரோடு எழுந்தாள் ஹாசினி.
மூவரும் முதியோர் இல்லம் நோக்கி புறப்பட்டனர்……………..
M.K.C.