இஸ்லாமாபாத், மார்ச் 18
லஷ்கர் பயங்கரவாதி அபுகுத்தல் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவராக இருந்த அபுகுத்தல், ஜம்மு காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறியதற்கு மூளையாக செயல்பட்டுள்ளான்.
26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி தான் அபுகுத்தல். இவன் கடந்த ஜூன் 9ம் தேதி ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தான்.
இவன் தலைமையில் தான் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பாகிஸ்தானியர்கள் உட்பட ஐந்து பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அதில் அபுகுத்தல் ஒருவன். இவனை ராணுவம் உட்பட பல பாதுகாப்பு அமைப்புகள் கண்காணித்து வந்தன. இந்த சூழலில் தற்போது பாகிஸ்தானில் அவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
பாகிஸ்தானில் இருந்து கொண்டு லஷ்கர் இ தொய்பா அமைப்புக்காக ஆட்கள் சேர்த்தல், ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மை சமூகம், பாதுகாப்பு படையினருக்கு எதிரான தாக்குதல் போன்றவற்றிலும் இவன் மூளையாக இருந்து செயல்பட்டு உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.