புதுடெல்லி:
வக்பு திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதையடுத்து, வக்பு திருத்த சட்டம் அமலுக்கு வந்தது.
வக்பு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான மசோதா கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. ஜெகதாம்பிகா பால் தலைமையின குழு நீண்ட ஆய்வுக்குப் பிறகு தனது பரிந்துரையை வழங்கியது.
இதன் அடிப்படையில் வக்பு திருத்த மசோதா கடந்த 2-ம் தேதி மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தாங்கள் கோரிய திருத்தங்கள் சேர்க்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், சுமார் 13 மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு நள்ளிரவில் மசோதா நிறைவேறியது. இதையடுத்து 3-ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 17 மணி நேர விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, இந்த மசோதா மீதான வாக்கெடுப்பின்போது, மக்களவையில் ஆதரவாக 288 உறுப்பினர்களும் எதிராக 232 பேரும் வாக்களித்தனர். இதுபோல மாநிலங்களவையில் ஆதரவாக 128 பேரும் எதிராக 95 பேரும் வாக்களித்தனர்.
பிரதமர் வரவேற்பு: இந்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “வக்பு மசோதா நிறைவேறியிருப்பது திருப்புமுனை தருணம். வக்பு அமைப்பின் செயல்பாடுகள் நீண்ட காலமாக வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்தது. இந்நிலையில் வக்பு திருத்த மசோதா வெளிப்படைத்தன்மையையும் மக்களின் உரிமையையும் பாதுகாக்கும்” என பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து இந்த மசோதா குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து இது சட்டமானது. அரசிதழிலும் வெளியிடப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தது.
இந்த சட்டம் வக்பு சொத்துக்களின் நிர்வாகத்தை சீர்திருத்துதல், பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் வக்பு வாரியங்களில் பல்வேறு முஸ்லிம் பிரிவுகளின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் பாரம்பரிய தளங்களைப் பாதுகாத்தல், சமூக நலனை மேம்படுத்துதல் மற்றும் முஸ்லிம் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்கள் உள்ளிட்ட ஓரங்கட்டப்பட்ட பிரிவினரின் சமூக, பொருளாதார நலனை மேம்படுத்துவதுதான் இந்த சட்டத்தின் நோக்கம் ஆகும்.
கடந்த 1923-ம் ஆண்டின் முசல்மான் வக்பு சட்டத்தை ரத்து செய்ய வகை செய்யும் முசல்மான் வக்பு (ரத்து செய்தல்) மசோதாவுக்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதற்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி உள்ளார். காலாவதியான விதிகளை ரத்து செய்வதுதான் இதன் நோக்கம்.