கேரளாவின் வயநாடு தொகுதிக்கு நேற்று வந்த காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தி, புல்பள்ளியில் உள்ள ஸ்ரீ சீதா தேவி லவகுசா கோயிலில் நேற்று வழிபட்டு பிரசாதத்தை பெற்றுக் கொண்டார். படம்:பிடிஐ
கேரளாவின் வயநாடு பகுதிக்கு 3 நாள் பயணமாக வந்துள்ள அத்தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி நேற்று கண்ணூர் விமான நிலையம் வந்தார். அங்கிருந்து அவர் காரில் வயநாடு சென்றார். புல்பள்ளி என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ சீதா தேவி லவ குசா கோயிலில் அவர் வழிபட்டார். சுல்தான் பதேரி பகுதியில் உள்ள புல்பள்ளி கிராம பஞ்சாயத்தில் அவர் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். அங்காடிசேரி பகுதியில் ஸ்மார்ட் அங்கன்வாடியை அவர் திறந்து வைத்தார். அதிரட்டுக்குன்னு என்ற இடத்தில் லிப்ட் நீர்ப்பாசன திட்டத்தையும், இருளம் பகுதியில் தடுப்பு அணை திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
மேனன்காடி என்ற இடத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து சமுதாய அரங்கில் வனிதா சங்கமத்தை அவர் தொடங்கி வைத்தார். கல்பேட்டா என்ற இடத்தில் ஒரே பள்ளி, ஒரே விளையாட்டு திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். கல்பேட்டா எல்ஸ்டோன் எஸ்டேட் பகுதியில் முண்டக்கை-சூரல்மலா நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உருவாக்கப்படும் டவுன்ஷிப் திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மனந்தவாடியில் உள்ள வள்ளியூர்காவு கோயிலும் அவர் நேற்று மாலை வழிபட்டார்.