****************************************************************
முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் , சென்னை
*****************************************************************
உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள் நீதிநூல் மட்டுமன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவர் நமக்குத் தந்துள்ள வாழ்வியல் அறநூல் ஆகும். இலக்கிய உலகின் கால நதியில் ஆண்டுதோறும் சூழலுக்கு ஏற்ப திருக்குறள் புதிய புதிய சிந்தனைகளை நமக்கு உருவாக்கிக் கொடுக்கின்ற அற்புத நூல்.
சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுட்களைக் கொண்டது.
எல்லோராலும் பாராட்டப்படும் திருக்குறள், மனிதநேயச் சிந்தனைகளை மதம், மொழி, இனம், நிறம், நாடு என்கிற எல்லைகளைக் கடந்து வாரி வழங்கிக்கொண்டு நம்மோடு பயணித்து வருகிறது.
வாழ்வியல் நீதிகளாக, கல்வியால் ஏற்படும் நன்மை, நீத்தார் பெருமை, இல்வாழ்க்கை நெறி, இல்வாழ்வான், இல்லாளுக்கு இருக்கவேண்டிய பண்புகள், விருந்தோம்பலின் சிறப்பு, பொதுவாக மனிதனுக்கு இருக்க வேண்டிய இயல்புகள் எனப் பல நீதிகள் பகுத்துக் கூறப்பட்டிருக்கிறது. வள்ளுவர் கூறிய வாழ்வியல் நீதிகள் தமிழ்க் குடிமகன் ஒருவனுக்கு மட்டுமன்றி, உலகில் மனிதனாகத் தோன்றிய அனைவருக்கும் உரிய வாழ்வியல் நீதிகளாக அமைந்திருப்பதே திருக்குறளின் சிறப்பாகும்.
வெறும் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்றுரைத்து சமூகத்தில் மேல் தளத்தில் இருப்பவனனாலும், கீழ்மட்ட நிலையில் இருப்பவனனாலும், தான் வாழும் உலகுடன் ஒத்துப் பொருந்தி வாழத் தெரியாதவன் எத்தனை உயர்ந்த கல்வியைக் கற்றவனாகவே இருந்தாலும் கல்லாதவனாக, அறிவற்றவனாகவே மதிக்கப்படுவான் என்பதை,
“உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்”
என்ற குறள் மூலம் கல்வியின் சிறப்பை விளக்குகிறார்.
இவ்வாறு பட்டறிவோடு கற்ற கல்வியால் தான் வாழும் காலத்தில் ஆகச்சிறந்த சான்றோனாக விளங்கினால் ….இதனைக் கேட்டபோது ஈன்ற பொழுதைவிட அகம் மகிழ்வாள் அன்னை என்கிற வாழ்வியலோடு ஒன்றிப்போகிற மனித உள்ளத்தை வள்ளுவர் …..
“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்டதாய்”
வீடு பேற்றை அடைய துறவறத்தை விட மிகச் சிறந்தாகக் கருதப்படும் இல்வாழ்க்கை, தற்காத்துக் கொண்டு தற்கொண்டானையும் பேணிப் பாதுகாக்கும் இல்லாளையும், இவன் தந்தை என்னோற்றான் கொல் என்று சொல்லுமளவுக்கு கல்விக் கேள்விகளில் சிறந்த மகனையும் பெற்று பிறன் பழிப்பு இல்லாத வாழ்க்கையே பண்பும் பயனும் நிறைந்தகாக இருக்கும் என்கிறார் திருவள்ளுவர். இதையே,
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”
“அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று”
என்ற குறள்கள் மூலம் விளக்குகிறார்.
இதைவிட வாழ்வியலை எப்படி சுருங்கக் கூறி விளக்க முடியும்.
தற்கால இலக்கியமாக வாழும் தமிழ் ஹைக்கூ கவிதைகளில் இப்படித்தான் கவிஞர்கள் மூன்றடியில் சமூக அக்கறையுடன் எழுதி வருகிறார்கள். ஜப்பானிய மூன்று வரி ஹைக்கூ கவிதைகள் எட்டாம் நூற்றாண்டு கண்டறியப்பட்டு 18 ஆம் நூற்றாண்டில்தான் உலகம் அறிந்தது. ஆனால் எங்கள் ஐயன் திருவள்ளுவனோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஈரடி குறள் வெண்பாவை உலகுக்கு ஏற்ப எழுதியுள்ள பெருமை தமிழராகிய நமக்கு உள்ளது.
வந்த விருந்தினரை உபசரித்து அனுப்பிவிட்டு வரும் விருந்தினரையும் எதிர்பார்த்திருந்து அழைத்துப் போற்றுவான். வானத்தவர்க்கு நல்ல விருந்தினராகச் சென்று சேருவான் என்கிற மனிதநேய வாழ்வியலை, மண் சார்ந்த மரபினை அற்புதமான உளவியல் நோக்கோடு வள்ளுவர் ….
“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு”
என்று கூறும் குறள் வழி அறியலாம்.
ஒருவருக்குத் முற்பகலில் தீங்கு செய்தால் பிற்பகலிலேயே அத் தீங்கை அனுபவிக்க நேரும் என்ற நீதியையும் வலியுறுத்துகிறார் திருவள்ளுவர்
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்”
ஒருவன் தனக்கு இன்னா செய்யும் போது திரும்பி ‘did for tat’ என்று பழிக்கு பழி வாங்காமல் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு என்ற பைபிளின் பண்பைப் போல தீமை செய்தவன் நாணும் விதமாக நன்மை செய்து விடவேண்டும் என்று
“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”
என வாழ்வியலின் உச்சமாகக் கூறுகிறார்.
1330 திருக்குறளில் மகுடமாக மனிதனுக்கு இருக்கவேண்டிய அடிப்படை வாழ்வியல் கருத்தாக இதனை நாம் ஏற்கலாம்…
மனிதனின் வாழ்நாள் சிறிது. அதில் சாதிக்கவேண்டியவை எண்ணற்றவை.. கூடி வாழும் மனிதர்களுடன் நல்லுறவு இருந்தால் தான் வாழ்க்கையில் சில நல்ல காரியங்களைச் சாதிக்கமுடியும். நல்லுறவு கொள்ள நன்மொழி பேசத் தெரிந்திருக்கவேண்டும் என்றும் புறங்கூறக் கூடாது; பயனற்ற சொற்களைப் பேசக் கூடாது என்று திருவள்ளுவர் இனிய மொழிகளையே பேசவேண்டும் என்றும், நல்ல கனிந்த கனி கையிலிருக்கும்போது கொடூரமான வார்த்தைகளை ஏன் பேசவேண்டும் என்று கேட்கிறார்,
“இனிய உளவாக இன்னாதல் கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று”
இந்த திருக்குறளை மனித வாழ்வியலின் மகுடம் என்றே நான் கூறுவேன்.
பொதுமறை, வாழ்வியல் நூல், அறநூல், முப்பால், நீதி நூல்,
தெய்வநூல், பொய்யாமொழி, வள்ளுவம், இயற்றமிழ் முதுமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மனு நூல் , வள்ளுவ மாலை, குறளமுதம்
என்றெல்லாம் பலவாறு போற்றப்படுகிறது திருக்குறள்.
ஏற்கனவே 43 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நம் திருக்குறளை, வாழ்வியல் அறநூலை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பாக 58 பழங்குடியின மொழிகள் உட்பட 120-க்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்தி, மராத்தி, நேபாளி, மலையாளம், ஒடியா, உருது, அரபி, பாரசீகம், படுகு, வாக்ரிபோலி ஆகிய 10 மொழிகளில் திருக்குறள் விரைவில் வெளியாகவுள்ளது.
இதன்தொடர்ச்சியாக, பாசா, பர்மீஸ், ஃபிஜியன், ஐரிஷ், கெமர், கிரியோல், மலாய், மங்கோலியன், தாய், வியட்நாமிஸ், டேனிஷ், சிங்களம், ஜப்பானியம், கொரியன், சௌராஷ்டிரா, கொங்கனி, அஸ்ஸாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, கொங்கணி, மைதிலி, சம்ஸ்கிருதம், சந்தாலி, சிந்தி உள்ளிட்ட 42 மொழிகளிலும் திருக்குறள் விரைவில் வெளியாகவுள்ளது. கம்போடியா நாட்டின் கெமர் மொழியிலும் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்துள்ளனர்.
தமிழ்மண்ணில் இத்தகு சிறப்புடைய அறிய வாழ்வியல் நூலாக திருக்குறள் விளங்குகிறது. ஆனால் இந்திய அரசு இதுவரை இந்நூலை தேசிய நூலாக அறிவிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
ஒவ்வொரு மனிதனிடம் இருக்கவேண்டிய குணங்களாக இனியவை கூறல் இன்னா செய்யாமை, நன்றி மறவாமை, புறங்கூறாமை, விருந்தோம்பல், மனத்தூய்மை போன்றவற்றை வாழ்வியல் நீதிகளாக எடுத்துக்கூறும் திருக்குறள் உலகெங்கும் அனைவரது வீட்டிலும் இருக்கவேண்டிய அறநூல்.
வாழ்க வள்ளுவம்
வளர்க வாழ்வியல் கோட்பாடுகள்