'அம்மா உன் வயிற்றினிலே...' என்ற நல.ஞானபண்டிதன் எழுதிய சிறுகதை, வழக்கமாக நமது பத்திரிகையில் வெளிவரும் கதைகளை விட கொஞ்சம் பெரியதாக இருந்ததுடன் மிகச் சிறந்த உயர்ந்த கதையாகவும் இருந்தது. சில பத்திரிகைகளில் நட்சத்திரக் கதை என்று சில கதைகளுக்கு ஒரு தனி முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதுபோல இருந்தது அம்மா உன் வயிற்றினிலே...சிறுகதை.
'தாயுள்ளம்' என்ற கோபாலன் நாகநாதனின் சிறுகதை, வயதான காலத்தில் தனது மகனை யாரென்று காட்டிக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, பார்த்தால் போதுமென்று துடிக்கும் அந்த பெற்ற மனதின் பாசத்தை, மிகவும் பரிதாபமாக உணர்த்துகிறது. இந்த சிறுகதை இன்னும் கூட மறக்கமுடியாதபடி மனதை பிசைகிறது.
சசிகலா திருமாலின் 'சப்தமிடும் மௌனங்கள்...' தொடர்கதை ஒரே கிளு கிளுப்பாக செல்கிறது. முத்தங்களும் பரிசுப்பொருட்களுமென்று ஒரே குதூகலமாக இருக்கும் இந்த காதல் விளையாட்டுகள் அடுத்து எதில்போய் முடியப்போகிறதோயென்று கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. படிக்க படிக்க ஆர்வமாகவும் இருக்கிறது.
ஸ்ரீபெரும்புதூர் அரக்கோணம் மார்க்கத்தில் நரசிங்கபுரத்தில் அமைந்திருக்கும் நரசிம்மர் கோயிலைப்பற்றி ரமா ஸ்ரீனிவாசனின் கட்டுரையை படித்தேன். இதைப்போல மக்களிடையே பிரபலமடையாத புராதன கோயில்களை அறிமுப்படுத்தும் தமிழ்நாடு இ.பேப்பருக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் இந்தியாவின் முக்கியமான முசுலிம் தலைவரைப் பற்றிய கட்டுரை மிகச்சிறப்பு. 'காயிதே மில்லத்' என்ற அரபு சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள் என்பதை இந்த கட்டுரை மூலம்தான் நான் அறிந்தேன். இந்திய அரசியலில் அனைத்துக் கட்சியினரும் மதிக்கத்தக்க தலைவராக விளங்கிய காயிதே மில்லத்தை பற்றிய இந்த கட்டுரை அவரின் சிறப்பை, புகழை மிகத்தெளிவாக உணர்த்தியது.
புதுக்கவிதை பகுதியில் தே. ராஜாசிங் ஜெயக்குமாரின் 'நியாயம் கேட்கும் கண்ணீர்' என்ற கவிதை மனதை நெகிழவைத்தது. 'யாருடைய கண்ணீருக்காவது நீங்கள் காரணமாகி விடாதீர்கள்! இதயத்தை உடைத்து வருவது கண்ணீர்! உங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்த்துக் கொள்ளுங்கள் இன்னும் ஒருமுறை! உங்களால் யாராவது கண்ணீர் வடித்தார்களா என்று...' என்பதுபோன்ற இந்த கவிதையின் வரிகள் ஒவ்வொன்றும் யார் மனதையும் புண் படுத்தாமல், அன்பாகவும் பண்பாகவும் நடக்க ஒரு வழிக்காட்டியாக அமைந்திருக்கிறது. நான் சமீபத்தில் படித்த மிக உயர்ந்த கவிதையென்றால் இதுதான்.
'காதலிப்பது எப்படி?' என்பதற்கு ஒரு கட்டுரையா? எதுக்கு சார் இது? சசிகலா திருமாலின் சப்தமிடும் மௌனங்கள்...! தொடர்கதையை படித்தால் போதாதா!
இந்த மாம்பழ சீசனில் 'நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாம்பழம்' என்ற கட்டுரை பொருத்தம்தான். தகுந்த நேரத்தில் தகுந்த கட்டுரைகளை வெளியிடுவதில் சிறந்து விளங்குகிறது நமது தமிழ்நாடு இ.பேப்பர்!
-சின்னஞ்சிறுகோபு ,
சிகாகோ.