தமிழக அரசால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் நிறுத்தப்பட்டன. காலம் காலமாக தொழிலாளர்கள் அனுபவித்து வந்த பல உரிமைகள் மறுக்கப்பட்டன.
போன முறை நடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட முக்கியமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தன.
அரசாங்கம் தேர்தலில் ஜெயித்ததற்கு அது அளித்திருந்த தேர்தல் வாக்குகளே முக்கியமானதாக கருதப்பட்டது.
வரப்போகும் தேர்தலுக்காக எதை வாக்குறுதியாக அளித்தாலும் அதை மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை என்பதை உணர்ந்த அரசு கடந்த தேர்தலில் அளி க்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முனைந்திருக்கிறது.
அரசு ஊழியர்கள் தங்களது மிக முக்கிய எதிர்பார்ப்பாகிய
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது விரைவில் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கையில்
காத்திருக்கின்றனர்.
தேர்தலுக்கு முன்பு இதற்கான உத்தரவை வெளியிட்டு விட்டால் அரசுக்கு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு 100 சதவீதம் நிச்சயம்.
இதனால் அரசுக்குத்தான் லாபம். ஒரே வாக்குறுதியை வைத்து இரண்டு தேர்தல்களில் ஜெயிக்க முடிந்தால் அது லாபம்தானே?
பஹல்காம் தாக்குதல் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆளாளுக்கு தங்கள் மனதில் தோன்றியதை பேசி வருகிறார்கள். இது கட்சிக்கு மிகவும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
காங்கிரஸ் தலைவர்கள் மனம் போனபடி பேசும் பேச்சுகளுக்கு கட்சி பொறுப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருப்பது
கட்சிக்கே அவமானம். தங்கள் கட்சியின் குட்டி தலைவர்களின் வாயை அடக்க முடியாதது அவமானம் தானே ?
நலம் தரும் மருத்துவம் பகுதியில் நல்லெண்ணையின் மருத்துவ குணங்களை படித்து வியந்து போனேன்.
மூட்டுவலிக்கு மிகச்சிறந்த மருந்து நல்லெண்ணெய் என்பதை இதை படிக்கும் அனைவரும் உணர்ந்து தங்கள் மூட்டுகளில் நல்லெண்ணையை மேல் பூச்சாக பூசி மூட்டு தேய்மானத்தை வருமுன் தடுக்கலாமே !
35 வயதாகியும் கை நிறைய சம்பளம் வாங்கியும் தனக்கு திருமணமாகவில்லையே என்ற கவலையில் ஐடி ஊழியர் ஒருவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இப்பொழுதெல்லாம் பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தங்களை விட ஒன்று அல்லது இரண்டு வயது மூத்தவர்களை மட்டுமே தேர்வு செய்கிறார்கள்.
29 வயது ஆகிவிட்டாலே ஆண்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு திருமணம் நடப்பது சந்தேகமானதாகவே கருதப்படுகிறது.
எதிர்காலத்தில் ஆண் பெண் என்று பாலினம் இருப்பது போல " மணமாகாதவர் " என்று ஒரு நான்காவது பிரிவை ஏற்படுத்துவார்கள் என்று நம்பலாம். அந்த அளவுக்கு திருமண உறவு சீர்கெட்டு கிடக்கிறது.
-வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்