ஹூஸ்டன், மார்ச் 17
ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் நாசா விஞ்ஞானிகளுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்று காலை சென்றடைந்து உள்ளது. தற்போது சுனிதா வில்லியம்சை மீட்கும் பணியில் முதல் வெற்றி கிடைத்துள்ளது. அவர்கள் 19ந்தேதி பூமிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்.) கடந்த ஆண்டு ஜூன் 5-ந்தேதி ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஆய்வு பணிக்காக பச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லயம்ஸ் ஆகிய இருவரும் சென்றனர். ஒரு வார காலம் தங்கி ஆய்வு பணி மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், குறுகிய கால பரிசோதனைக்காக சென்ற அவர்களுடைய பயணம், விண்கல தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டு, பூமிக்கு திரும்ப முடியாமல் விண்வெளி நிலையத்திலேயே சிக்கி தவிக்கும்படியான சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
பூமிக்கு திரும்ப முடியாமல் தொடர்ந்து 9 மாதங்களாக அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவித்தனர்.
இந்நிலையில் விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா அமைப்பு இணைந்து டிராகன் விண்கலம் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று அதிகாலை பால்கன் 9 டிராகன் விண்கலம் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. இதில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆனி மெக்கிளைன், நிக்கோலி அயர்ஸ், ஜப்பான் விண்வெளி வீரர் டகுயா ஒனிஸி, ரஷிய விண்வெளி வீரர் கிரிஸ் பெஸ்கோவ் ஆகியோர் சென்றனர். இந்த ராக்கெட் இன்று காலை 9.40 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்று இணைந்தது. இதனால் சுனிதா மற்றும் வில்மோர் இருவரும் பூமிக்கு திரும்புவதற்கான பணியில் முதல் வெற்றி கிடைத்துள்ளது.
நாசா விஞ்ஞானிகள் நால்வரும் டிராகன் விண்கலத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் இறங்கினர். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற அவர்களை, அங்கு ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வரும் சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோருடன் சேர்ந்து பிற விஞ்ஞானிகளும் கைதட்டி வரவேற்றனர். இந்த படங்களை நாசா வெளியிட்டுள்ளது. வருகிற 19-ந்தேதி வில்மோர் மற்றும் வில்லயம்ஸ் இருவரும் அந்த விண்கலத்தில் புறப்பட்டு பூமிக்கு திரும்புவார்கள். அவர்களுடன் நாசா விஞ்ஞானிகள் நிக் ஹேக், டான் பெடிட் மற்றும் ரஷிய விஞ்ஞானிகள் அலெக்சாண்டர் கோர்புனோவ், அலெக்சி ஓவ்சினின் மற்றும் இவான் வாக்னர் ஆகியோரும் பூமிக்கு திரும்புவார்கள். எனினும், இந்த திட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறுகளாலோ அல்லது பிற காரணங்களாலோ கால தாமதம் ஏற்படவும் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.