அந்த இலக்கிய அமைப்பின் ஆறாம் ஆண்டு விழா... அந்த நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் பெரிய நட்சந்திர விடுதியில் நடந்து கொண்டிருக்கிறது!
தமிழகத்தின் பல பகுதியிலிருந்து கவிஞர்கள்.. எழுத்தாளர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர்.
கவிதை ஆர்வத்திலே பலமைல் தூரங்களைக் கடந்து.. பேருந்திலும்.. ரெயிலிலும்.. சொந்தக்காசை செலவு செய்து அந்த இலக்கிய விழாவில் கலந்து கொண்டவர்கள் பலர். அவர்களில் ஒருவன் கவிமுகிலன்.
எத்தனையோ தடைகள் ஏளனங்கள்.. அவமதிப்புகள் கடந்து பல்லாண்டுகளாக கவிதைகள் இயற்றிக் கொண்டிருக்கின்றான் கவிமுகிலன். அவனைப் போல் எத்தனைப்பேர்?
நுழைவாயில் அருகே விழா ஏற்பாடடாளர் நின்று கொண்டிருந்தார்.
அவரைச்சுற்றி ஒரு கூட்டம். அவர் தமிழ்நாடு அரசின் விருதாளர். பல புத்தகங்க ளை வெளியிட்டவர்! பற்பல விழாக்களை நடத்தியவர்.. பலருக்கும் கம்பன் விருது.. பாரதி விருது என்று அள்ளி வழங்கியவர்!
நுழைவாயிலில் ஒரு ஏட்டில் விழாவில் கவிதைப் போட்டியில் பங்கேற்ப்பவர்கள் தமது பெயரையும் தொலைபேசி எண்ணையும் எழுதி வைத்தனர்.
அரங்கின் அருகே விழா ஏற்ப்பாட்டாளர்.. நின்று ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.
கவிமுகிலனை அழைத்தார்.. தம்பி எந்த ஊரில் இருந்து வருகின்றீர்கள்?
ஓ... திருச்சியா..
அப்புறம் தம்பி ஒரு விசயம்.. என்று அருகே அழைத்து இவ்வாறு கூறினார்!
தம்பி போட்டிக்கு பங்குத்தொகை மற்றும் சிறப்பு ஷீல்டு சான்றிதழ் விருதுக்காக ஆயிரம் ரூபாய் தர வேண்டும்..
தொகை இல்லையே ஐயா... இது கவிமுகிலன்.!
அப்படியா கவிதை பாடுங்கள் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும் என்று சொன்னார்.
கவிமுகிலன் ஏழைக்கவிஞன் . செலவு செய்து கொண்டு வந்தவன் ஆர்வமுடன் கவிதை எழுதி வந்தவன் விருதுகளை காசுதான் தீர்மாணிக்கும் அவலநிலை கண்டு தலை குனிந்தான்.
திறமையை மதிப்பார் யாருமுண்டோ.. காசில்லாமல் கவி தைத் திறனுக்கு விருது தருவார் யாருமுண்டோ.. ஏக்கத்தோடு ஒரு ஓரமாக சென்று அமர்ந்தான்!
கவியரங்கம் ஆரம்பம் ஆனது பலரும் வாசித்தனர்.. முணுமுணுத்தனர்.. துதி பாடினர்..
கவிமுகிலன் பாடுகின்றான் கடைசியாக...
*நமது மொழி நமது நாடு நமதுமக்கள்..*
*நலம்பெறவே பாடுவதே நமது கவிதை!*
*நமது இனம் விழித்திடவே கவிதைப் பாடி..*
*உறக்கமதை விரட்டுவதே நமது வேலை.!*
என்று உணர்ச்சியுடன் கவிதை வழங்கினன்.
அரங்கம் அதிர்ந்தது..
கரஓசை எழுந்தது.. பலரும் மகிழ்ந்தனர்.
விருது வழங்கும் நேரம்
பணம் ஆயிரம் செலுத்தியவர்கள் கேடயம்.. பதக்கம்.. சான்றிதழ்.. பெற்றவர் பலர்.. பணம் தந்தவர் பதக்கம் பெற்றார்... தொகை தந்தோர் விருது பெற்றார்.. கவிமுகிலனை யாரும் அழைக்க வில்லை..
கடைசியாக கவிமுகிலன் அழைக்கப் பட்டான்... சான்றிதழ் பெற.. ஆனால்... ஆனால்.... அவன் வரவில்லை.. அவனுக்கு விருது இல்லை.. திறமைகள் மதிக்கப் படுவதில்லை.. விரக்தியுடன் என்கடன் கவிபாடி கிடப்பதே! என்ற இலக்கோடு.. விழா அரங்கத்தைக் கடந்து. பேருந்து நிலையம் நோக்கி சென்று கொணடிருந்தான்.! இங்கே.. விருது வழங்கும் விழா நடந்து கொண்டிக்கின்றது அ்ங்கே!
-வே.கல்யாண்குமார்.
பெங்களூரூ.