அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் குடியேறியவர்களை வெளியேற்றும் நிகழ்வு தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இது இதற்கு முன்னரும் நடந்திருந்தாலும், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதற்குப் பின்னர், இந்த வெளியேற்றம் மிகுந்த கவனம் பெற்று வருகிறது.
அப்படிக் குடியேறிய 200-க்கும் மேற்பட்ட வெனிசுலா நாட்டு மக்களைத் தற்போது ட்ரம்ப்பின் அமெரிக்க அரசு எல் சால்வடாரில் இருக்கும் சிறையில் அடைத்துள்ளது. எல் சால்வடார் என்பது மத்திய அமெரிக்காவில் இருக்கும் ஒரு நாடாகும். ட்ரம்ப் அரசு வெனிசுலா மக்களை அமெரிக்காவிலிருந்து எல் சால்வடாருக்கு நாடு கடத்தி, அங்கிருக்கும் கொடும் சிறையில் அடைத்துள்ளது. இந்த சிறை கடுமையான குற்றவாளிகளுக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக சிறை ஆகும்.
'இந்த மக்களை நாடு கடத்தக்கூடாது' என்று கடந்த சனிக்கிழமை அமெரிக்க நீதிமன்றம் தற்காலிக தடை விதித்திருந்தும், இந்த மக்கள் நாடு கடத்தப்பட்டிருக்கிறார். இந்த உத்தரவு வரும்போதே, மக்களை விமானத்தில் ஏற்றி, பயணம் தொடங்கிவிட்டது என்று அமெரிக்க அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மீறியதற்குக் காரணம் சொல்கிறார்கள்.
இந்த மக்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பாமல், சிறையில் அடைத்ததற்கு முக்கிய காரணம், 'டிரென் டி அரகுவா' என்னும் வெனிசுலாவைச் சேர்ந்த பயங்கரவாதக் குழு ஆகும். இந்தக் குழுவைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும், போதை மருந்து கடத்தல் செய்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு இருந்தது. இப்போது அமெரிக்க அரசு சிறையில் அடைத்துள்ள 200 பேரும் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள்தான் என்று அமெரிக்க அரசால் கூறப்படுகிறது.
ஆனால், வெனிசுலாவைச் சேர்ந்த மிரெலிஸ் காசிக் என்னும் பெண்மணி, "என்னுடைய மகன் கடந்த சனிக்கிழமை காலை எனக்கு போன் செய்து தன்னை வெனிசுலா மக்கள் குழுவுடன் வைத்திருக்கிறார்கள். எங்களை எங்கேயோ கொண்டு செல்லப்போகிறார்கள். ஆனால், எங்கே என்று தெரியவில்லை என்று பேசினான். அதன் பின்னர், அவன் எனக்கு போன் செய்யவில்லை. எங்கே இருக்கிறான் என்பதும் தெரியவில்லை" என்று கூறுகிறார். உரிய விசா வைத்திருக்கும் வெனிசுலா கிட்னி மருத்துவர் ஒருவரும் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்.
நீதிமன்ற உத்தரவை மீறியும், உரிய ஆவணங்கள் வைத்திருப்பவர்களையும், அப்பாவி மக்களையும் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக வரும் தகவல்களால் அமெரிக்காவில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.